ஜியோ வருகையால் ஆட்டம் கண்ட நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் கம்யூனிகேசன் கடனை அடைக்க முடியாததால் திவால் சட்ட நடவடிக்கைகளுக்கு தயாராக உள்ளதாக அனில் அம்பானி நிறுவனம் அறிவித்துள்ளார்.

ஜியோ வின் அறிமுகத்தால் இவரது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் கடும் சரிவை கண்டது. இதனால் அந்நிறுவனம் மீது டெலிகாம் சாதனங்களை உற்பத்தி செய்யும் ஸ்வீடன் நாட்டின் எரிக்ஸன் நிறுவனம் தேசிய சட்ட தீர்ப்பாயத்தில் புகார் அளித்தது. அதில், அனில் அம்பானியை கைது செய்து தங்களுக்கு சேர வேண்டிய ரூ.550 கோடியை திருப்பி செலுத்த உத்தரவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்குத் தொடரப்பட்ட நிலையில், திவாலானதாக அறிவிக்க ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் இயக்குநர்கள் தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயம் மூலம் கடன் தீர்வுக்கு முயற்சி மேற்கொண்டது. ஆனால், 18 மாதங்கள் ஆகியும் இதில் எந்த முன்னேற்றமும் இல்லை. இதை தொடர்ந்து நிறுவன முதலீட்டாளர்கள் நலனை கருத்தில் கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கையை தொடர முடிவு செய்யப்பட்டது. இதன்மூலம் இந்த நிறுவனம் திவால் ஆனதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிறுவனம் அலைவரிசை, செல்போன் கோபுரங்கள் விற்பனை மூலம் நிதிதிரட்டும் முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது. அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனத்துக்குதான் ரபேல் தயாரித்துக் கொடுக்கும் ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது.