amway fraud :ஆம்வே இந்தியா நிறுவனத்தின் ரூ.758 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கி அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் இன்று நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ஆம்வே இந்தியா நிறுவனத்தின் ரூ.758 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கி அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் இன்று நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ஆம்வே நிறுவனம் நேரடி விற்பனை பலநிலை சந்தைத்தப்படுத்துதலில் மோசடிகளும், சட்டவிரோத பணப்பரிமாற்ற நடவடிக்கையும் நடந்திருப்பதையடுத்து சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன என அமலாக்கப்பிரிவு தெரிவித்துள்ளது.
ரூ.27ஆயிரம் கோடி
அமலாக்கப்பிரிவு தகவலின்படி, “ ஆம்வே நிறுவனம் இந்தியாவில் 2002-03 முதல் 2021-22 வரை, ரூ.27 ஆயிரத்து 562 கோடி வசூலித்து, அதற்காக ரூ.7,588 கோடி கமிஷன் தொகையை பகிர்மானர்களுக்கும், உறுப்பினர்களுக்கும் வழங்கியுள்ளது.
இதையடுத்து, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆம்வே நிறுவனத்தின் நிலம், தொழிற்சாலை, எந்திரங்கள், வாகனம், வங்கிக்கணக்கு, டெபாசிட் ஆகியவைற்றை அமலாக்கப்பிரிவு முடக்கியுள்ளது.

வங்கி கணக்கு, டெபாசிட்
ஆம்வே நிறுவனத்துக்குச் சொந்தமான நகரும் மற்றும் நகரா சொத்துக்களாக ரூ.411.83 கோடியும், வங்கி இருப்பு ரூ.345.94 கோடியும் முடக்கப்பட்டுள்ளன. விசாரணையில் ஆம்வே நிறுவனம் ரூ.21.39 கோடி பங்கு முதலீட்டை இந்தியாவில் ரூ.1996-97 முதல் 2020-21 வரை வாங்கியுள்ளது. இதற்காக ரூ.2,859.10 கோடி ஈவுத் தொகையாக ஆம்வேவுக்கும், முதலீட்டாளர்களுக்கும் தரப்பட்டுள்ளது.
தவிர பிரிட்வேர்ல்டுவைட் இந்தியா பிரைவேட், நெட்வொர்க் ட்வொன்டி ஒன் பிரைவேட் ஆகியவை அமலாக்கப்பிரிவு விசாரணையில் உள்ளன. இந்த நிறுவனம்தான் ஆம்வே உறுப்பினர்களுக்கு பயிற்சியும், பொருட்களும் வழங்குபவை. உறுப்பினர்களுக்கு பயிற்சி வகுப்புகள், பொருட்களை சங்கிலித் தொடர் சந்தைப்படுத்துதல் மூலம் வழங்கி வருபவை. இந்த புரமோட்டர்கள் மிகப்பெரிய மாநாடுகளை நடத்தியும், ஆடம்பரமாக இருந்தும், சமூக ஊடகங்கள் மூலம் முதலீட்டாளர்களையும் ஈர்த்துள்ளனர்.
மோசடி
புதிய உறுப்பினர்கள் பொருட்களைப் பயன்படுத்துவதற்காக வாங்கவில்லை, ஆனால் உயர்நிலையில் உறுப்பினர்களாக உயர்த்தி பணக்காரர்களாக ஆக வேண்டும். உண்மை என்னவென்றால், உயர்நிலை உறுப்பினர்களால் பெறப்படும் கமிஷன்கள் பொருட்களின் விலைகளை உயர்த்துவதில் பெரும் பங்களிப்பை வழங்குகின்றன. ஆம்வேயில் உறுப்பினர்களாகி எவ்வாறு பணக்காரர்களாவது என்பதைதான் பிரச்சாரமாகச் செய்துள்ளது” எனத் தெரிவித்துள்ளது.
