டாடா நிறுவனத்தின் ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக துருக்கி ஏர்லைன்ஸ் முன்னாள் தலைவர் இல்கர் ஐஸி நியமிக்கப்பட்டுள்ளார்.
டாடா நிறுவனத்தின் ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக துருக்கி ஏர்லைன்ஸ் முன்னாள் தலைவர் இல்கர் ஐஸி நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏர் இந்தியா நிர்வாகக் குழுக் கூட்டம் இன்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
ஏர் இந்தியா நிறுவனம் கடனில் தத்தளித்து வந்தநிலையில் அதன்பங்குகளை விற்பனை செய்ய கடந்த 5 ஆண்டுகளாக மத்திய அரசு முயன்றது. டாடா குழுமத்தின் துணை நிறுவனமான தலாஷ் பிரைவேட் லிமிடெட் ரூ.18 ஆயிரம் கோடிக்கு விலைக்கு கேட்டது. இதையடுத்து, கடந்த அக்டோபர் மாதம், 8-ம் தேதி ஏர் இந்தியா நிறுவனம் விற்கப்பட்டதாக மத்திய அரசு அதிகாரபூர்வமாக அறிவித்தது.

ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளையும் முறைப்படி, டாடா குழுமத்திடம் மத்திய அரசு ஏற்கெனவே பரிமாற்றம் செய்துவிட்டது. இதையடுத்து கடந்த மாதம் 27ம்தேதி ஏர் இந்தியா நிறுவனம் டாடா குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில் புதிய நிர்வாக இயக்குநராக யார் நியமிக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தநிலையில் துருக்கி ஏர்லைஸ் முன்னாள் மேலாண் இயக்குநர் இல்கர் ஐஸி நியமிக்கப்பட்டுள்ளார்.
டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவர் என். சந்திரசேகரன் கூறுகையில் “ துருக்கி ஏர்லைன்ஸ் வெற்றிகரமாக இன்று செயல்படுவதற்கு அதன்முன்னாள் இயக்குநர் இல்கர்தான் காரணம். அவரை டாடா குழுமத்துக்கு இன்முகத்துடன் வரவேற்கிறோம். ஏர்இந்தியாவை அவர் சிறப்பாக வழிநடத்துவார் என நம்புகிறோம்” எனத் தெரிவித்தார்.
கடந்த 1971ம் ஆண்டு இஸ்தான்புல் நகரில் இல்கர் ஐஸி பிறந்தார். 1994ம் ஆண்டு பில்கென்ட் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல், பொதுநிர்வாகம் பயின்ற ஐஸி, அரசியல்அறிவியல் பாடத்தில் பிரிட்டனில் உள்ள லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் 1995-ம் ஆண்டு ஆய்வுப்பணியை முடித்தார். 1997ம் ஆண்டு இஸ்தான்புல்நகரில் உள்ள மர்மராபல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகள் குறித்த முதுகலைப்படிப்பையும் ஐஸி முடித்தார்.

ஏர் இந்தியாவுக்கு சிஇஓவாக நியமிக்கப்பட்டது குறி்த்து இல்கர் ஐஸி கூறுகையில் “ நாட்டின் முன்னணி விமான நிறுவனமான டாடாவின் ஏர் இந்தியா ஏர்லைஸ் நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்பதில் பெருமை அடைகிறேன். ஏர் இந்தியாவில் ஏற்கெனவே இருந்த என்னுடைய சக நண்பர்களுடன் பணியாற்றி இருக்கிறேன், டாடா குழுமத்தாருடன் பழகியிருக்கிறேன். வலிமையான பாரம்பரியம் கொண்ட டாடாவின் பெயரைப் பயன்படுத்தி, உலகிலேயே சிறந்த விமான நிறுவனம் என்பதை நிரூபிப்போம். சிறந்த விமானப் பயண அனுபவத்தை பயணிகளுக்கு வழங்குவோம்” எனத் தெரிவித்தார்
