இந்தியாவின் கலங்கரை விளக்கமாக வேளாண்துறை நம்பிக்கை அளிக்கிறது என  ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.

கொரோனாவால் வீழ்ச்சி அடைந்த இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க ரூ. 20 லட்சம் கோடி ஒதுக்கப்படுவதாக  பிரதமர் மோடி அறிவித்தார். இதனை அடுத்து, 5 கட்டமாக பொருளாதார திட்டங்கள் மற்றும் சீரமைப்பு தொடர்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்புகளை வெளியிட்டார். பல முக்கிய பொதுத்துறை நிறுவனங்களில் தனியார் பங்களிப்பு அளிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். பொருளாதாரத்தை மீட்க 5 கட்டமாக நிதியமைச்சர் அறிவிப்புகளை வெளியிட்ட பின்னர், இன்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்களை சந்தித்து வருகிறார். 

அதில், ரெப்போ வட்டி விகிதம் 4.4 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. குறைக்கப்பட்ட வட்டியில் வங்கிகள் கடன் வழங்க வேண்டும். ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 3.35 சதவீதமாக உள்ளது. 

ஊரடங்கால் இந்தியாவில் தொழில்துறை உற்பத்தியும் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 2 மாத ஊரடங்கால் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தொழில்துறையை அதிகம் சார்ந்துள்ள மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் ஏற்பட்டுள்ளது. முக்கியத் தறைகள் 6.6 சதவீதம் அளவுக்கு வீழ்ச்சியை சந்தித்துள்ளன. மே 15 வரை அந்நிய செலாவணி கையிருப்பு 487 பில்லியன் டாலராக உள்ளது. இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு 9.2 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. 

வேளாண் துறை உற்பத்தி அதிகரித்திருப்பது புதிய நம்பிக்கையை அளித்துள்ளது. இந்தியாவின் கலங்கரை விளக்கமாக வேளாண்துறை நம்பிக்கை அளிக்கிறது. பருவமழை முன்கூட்டியே தொடங்கும் என்ற அறிவிப்பும் கூடுதல் நம்பிக்கை தருகிறது  என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.