விவசாய ஏற்றுமதி 26.7 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்வு: மத்திய அரசு!
விவசாய ஏற்றுமதி 2022-23 நிதியாண்டில் 26.7 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது என மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது
1987-88 நிதியாண்டில் 0.6 பில்லியன் அமெரிக்க டாலர் ஏற்றுமதியில் இருந்து 2022-23 நிதியாண்டில் 26.7 பில்லியன் அமெரிக்க டாலராக விவசாய ஏற்றுமதி உயர்ந்துள்ளது. வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் நடவடிக்கைகளால் இது சாத்தியமடைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
விவசாய ஏற்றுமதி 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இது 12% என்ற பாராட்டத்தக்க கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதத்தைக் காட்டுகிறது என மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2022-23ஆம் நிதியாண்டில், இந்தியாவின் வேளாண் ஏற்றுமதி 53.1 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியது, இந்தியாவின் வேளாண் ஏற்றுமதியில் ஆணையம் கணிசமான அளவுக்கு 51% பங்களித்துள்ளது. 2023 ஏப்ரல்-டிசம்பர் காலகட்டத்தில், ஏற்றுமதி செய்யப்படும் உள்ள 23 முக்கிய பொருட்களில், 18 பொருட்கள் நேர்மறையான வளர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளன. புதிய பழங்கள் ஏற்றுமதி 29% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
விவசாய ஏற்றுமதி 3ஆவது ஆண்டாக சரிவு: விவசாயிகளின் வருமானம் பாதிப்பு!
மேலும், பதப்படுத்தப்பட்ட காய்கறிகளின் ஏற்றுமதி 24% அதிகரித்துள்ளது. அதைத் தொடர்ந்து இதர பதப்படுத்தப்பட்ட பொருட்கள், பாஸ்மதி அரிசி மற்றும் புதிய காய்கறிகள் ஆகியவையும் கடந்த ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடும்போது கணிசமான வளர்ச்சியைக் கண்டுள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், இந்தியா தனது புதிய பழங்கள் ஏற்றுமதியை கணிசமாக விரிவுபடுத்தியுள்ளது, முந்தைய ஆண்டில் 102 இடங்களுடன் ஒப்பிடும்போது இப்போது 111 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
2023ஆம் ஆண்டு ஏப்ரல்-நவம்பர் காலகட்டத்தில் பல முக்கிய பொருட்கள் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது கணிசமான வளர்ச்சியைக் கண்டுள்ளது. உதாரணமாக, வாழைப்பழங்கள் 63%, பயறு (உலர்ந்த மற்றும் ஷெல் செய்யப்பட்டவை) 110%, முட்டைகள் 160% வளர்ச்சி அடைந்துள்ளன.
2023 ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில், பாசுமதி அரிசியின் ஏற்றுமதி மதிப்பு 19% அதிகரித்து, முந்தைய ஆண்டில் 3.33 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன் ஒப்பிடும்போது 3.97 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியது. அதே நேரத்தில், ஏற்றுமதியின் அளவு 11% வளர்ச்சியடைந்துள்ளது. ஈரான், ஈராக், சவுதி அரேபியா, அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை இந்த ஏற்றுமதிக்கான முதல் ஐந்து நாடுகளாக உள்ளன.
வேளாண் பொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் 1986 இல் நிறுவப்பட்ட ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் இந்தியாவின் வேளாண் ஏற்றுமதியை புதிய உயரங்களுக்கு கொண்டு செல்வதில் ஒரு முக்கிய சக்தியாக உருவெடுத்துள்ளது. இதன் 38ஆவது நிறுவன தினம் அண்மையில் கொண்டாடப்பட்டது.