Sri Lanka Adani Row: adani : pm modi:தொழிலதிபர் கவுதம் அதானி குழுமத்துக்கு இலங்கையில் இரு மின்திட்டங்களை வழங்கக் கோரி இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சவுக்கு பிரதமர் மோடி நெருக்கடி அளித்தார் என்று இலங்கை மின்துறை அதிகாரி ஒருவர் பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

தொழிலதிபர் கவுதம் அதானி குழுமத்துக்கு இலங்கையில் இரு மின்திட்டங்களை வழங்கக் கோரி இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சவுக்கு பிரதமர் மோடி நெருக்கடி அளித்தார் என்று இலங்கை மின்துறை அதிகாரி ஒருவர் பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

குற்றச்சாட்டு

இலங்கை நாடாளுமன்றக் குழுமுன் சிலோன் மின்வாரியத்தின் தலைவர் எம்எம்சி பெர்னான்டோ அளித்த வாக்குமூலத்தில் “ இலங்கையில் மின்திட்ட ஒப்பந்தத்தை கவுதம் அதானி குழுமத்துக்கு வழங்க அதிபர் கோத்தபய ராஜபக்சவுக்கு பிரதமர் மோடி நெருக்கடி அளித்தார்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த குற்றச்சாட்டு பரபரப்படைந்ததையடுத்து, சிலோன் மின்வாரியத்தின் தலைவர் எம்எம்சி பெர்னான்டோ தனது பதவியிலிருந்து ராஜினாமா செய்தார். ஆனால், இந்தக் குற்றச்சாட்டை அதிபர் கோத்தபய ராஜபக்ச மறுத்துவிட்டார். 

மின் திட்டம்

கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொழிலதிபர் கவுதம் அதானி, இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சவை கொழும்பு நகரில் சந்தித்துப் பேசினார். அதன்பின் டிசம்பரில் மன்னார் மற்றும் பூனேரி ஆகிய இடங்களில் இரு 50 கோடி டாலர் மதிப்பில் இரு காற்றாலை அமைக்கும் ஒப்பந்தத்தை அதானி குழுமத்துக்கு இலங்கை அரசு வழங்கியது.

இந்நிலையில் மன்னார் 500 மெகாவாட் புதுப்பிக்கத்தக்க மின்திட்டம் அமைப்பது தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பாக சிலோன் மின்வாரியத்தின் தலைவர் எம்எம்சி பெர்னான்டோ அந்நாட்டு நிதிஅமைச்சகத்துக்கு 2021, நவம்பர்25ம் தேதி கடிதம் எழுதியிருந்தார்.

கடிதம்

அந்தக் கடிதத்தை தனியார் சேனல் ஒன்று பெற்று வெளியிட்டுள்ளது. அதில் “ மன்னாரில் 500 மெகாவா மின்திட்டத்தை கவுதம் அதானி குழுமத்துக்கு வழங்க இந்திய அரசு இலங்கை அரசுக்கு நெருக்கடி கொடுத்தது” எனத் தெரிவித்துள்ளார். இந்தக் கடிதத்துக்குப்பின்புதான் அதானி குழுமத்துக்கு அந்த மின்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் அந்தக் கடிதத்தில் “ இலங்கையில் நிலவும் அந்நியச்செலாணி சிக்கலைத் தீர்க்கும் வகையில் இந்தியா, இலங்கை ஒப்பந்தத்தின்படி, அதானி குழுமத்துக்கு மின்திட்டம் வழங்குமாறு இந்திய அரசின் பரிந்துரையைத் தொடர்ந்து பிரதமரின் உத்தரவிட்டார்” எனத் தெரிவித்துள்ளார்.

அதானி குழுமத்துக்கு இந்த ஒப்பந்தத்தை வழங்குவது தொடர்பாக அதிபர் கோத்தபய ராஜபக்சவுடன் கடந்த ஆண்டு நவம்பர் 16ம் தேதி பெர்னான்டோ சந்தித்துப் பேசியுள்ளார். 

அதானி குழுமம் மறுப்பு

ஆனால் இந்தக் குற்றச்சாட்டை அதானி குழுமம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. அந்த நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில் “ மதிப்புமிக்க அண்டை நாட்டின் தேவையைக் கருதிதான் நாங்கள் முதலீடு செய்தோம் அதுதான் எங்கள் நோக்கம். பொறுப்பான நிறுவனமாக இருக்கும் நாங்கள், இருநாடுகளுக்கும் இடையிலான கூட்டுறவின் முக்கியமான பகுதியாகப் பார்க்கிரோம். இந்த ஒப்பந்தத்தை தவறாகச் சித்தரிப்பது வேதனைக்குரியது. இது தொடர்பாக இலங்கை அரசு ஏற்கெனவே விளக்கம் அளித்துள்ளது”எ னத் தெரிவித்துள்ளார்.

வாக்குமூலம்

இதற்கிடையே நாடாளுமன்றக் குழுவின் முன் ஆஜராகிய பெர்னான்டோ, இலங்கையில் இரு மின்திட்டங்களை அதானி குழுமத்துக்கு வழங்கியது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில், “ கடந்த ஆண்டு நவம்பர் 24ம் தேதி அதிபர் கோத்தய ராஜகபக்ச என்னை அழைத்துப் பேசினார். அப்போது, மன்னார், பூனேரி ஆகிய இரு மின்திட்டங்களையும் அதானி குழுமத்துக்கு வழங்கக் கோரி இந்தியப் பிரதமர் மோடி எனக்கு அழுத்தம் கொடுக்கிறார்.

அப்போது நான் அவரிடம் “ இந்த விவகாரத்தில் எனக்கு எந்தச்சிக்கலும் இல்லை. சிலோன் மின்வாரியத்துக்கும் கவலையில்லை. இது முதலீட்டு வாரியத்தோடு தொடர்புடையது” என்றேன். அதற்கு அதிபர், சரி நான் கவனிக்கிறேன் என்றார். 

இதுதொடர்பாக நான் நிதிச்செயலாளருக்கு ஒரு கடிதம் அளித்து, இரு நாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தம் என்பதால் தேவையானவற்றை செய்யக் கோரி அதிபர் உத்தரவிட்டுள்ளார் என்று தெரிவித்தேன்”எ னத் தெரிவித்தார்

Scroll to load tweet…

அதிபர் மறுப்பு

இந்தக் குற்றச்சாட்டை அதிபர் கோத்தபய ராஜபக்ச கடுமையாக மறுத்துள்ளார். அவர் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ சிலோன் மின்வாரியத் தலைவர் அளித்த மன்னார் மின்திட்ட ஒப்பந்தத்தை குறிப்பிட்ட நபருக்கும், நிறுவனத்துக்கும் வழங்கியது தொடர்பாக அளித்த வாக்குமூலத்தை நான் முற்றிலுமாக மறுக்கிறேன்” எனத் தெரிவித்தார். 

இந்நிலையில் தான் கூறிய குற்றச்சாட்டு உணர்ச்சிவசப்பட்டு தெரிவித்துவிட்டதாகக் கூறி பெர்னான்டோவும் குற்றச்சாட்டை வாபஸ் பெற்றுள்ளார்