adani  green share: இந்தியப் பங்குச்சந்தையி்ல் மதிப்பு மிக்க நிறுவனங்கள் பட்டியலில் பஜாஜ் பைனான்ஸ் மற்றும் ஹெச்டிஎப்சி வங்கிகளை முறியடித்து, அதானி குழுமத்தின் அதானி கிரீன் எனர்ஜி 8-வது இடத்தைப் பிடித்துள்ளது.

இந்தியப் பங்குச்சந்தையி்ல் மதிப்பு மிக்க நிறுவனங்கள் பட்டியலில் பஜாஜ் பைனான்ஸ் மற்றும் ஹெச்டிஎப்சி வங்கிகளை முறியடித்து, அதானி குழுமத்தின் அதானி கிரீன் எனர்ஜி 8-வது இடத்தைப் பிடித்துள்ளது.

டாப்-10

சந்தை மதிப்பின்படி, அதானியின் க்ரீன் எனர்ஜி நிறுவனத்தின் மதிப்பு ரூ.4 லட்சத்து 48 ஆயிரத்து 50 கோடியாகும். இதன் மூலம் பங்குச்சந்தையில் டாப்-10 நிறுவனங்கள் பட்டியலுக்குள் அதானி க்ரீன் எனர்ஜி நுழைந்தது.

அதானி கிரீன் எனர்ஜியின் பங்குகள் மதிப்பு நேற்று 2.70 சதவீதம் உயர்ந்து, ரூ.2,864க்கு விற்பனையானது. வர்த்தக நேரத்தில் 5.75 சதவீதம் அதிகரித்து, ரூ.2950 ஆக உயர்ந்தது.

8-வது இடம் 

பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் மதிப்பு ரூ.4 லட்சத்து 43 ஆயிரத்து 685 கோடியாகும், ஹெச்டிஎப்சி நிறுவனத்தின் மதிப்பு ரூ.4 லட்சத்து 31 ஆயிரத்து 28 கோடியாகும். இந்த ஆண்டில் மட்டும் அதானி க்ரீன் பங்குகள் மதிப்பு 115 சதவீதம் உயர்ந்துள்ளது.

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் சந்தை மதிப்பு ரூ.17 லட்சத்து 26ஆயிரத்து 714 கோடியாகும். அதைத் தொடர்ந்து டிசிஎஸ் மதிப்பு ரூ.13.39 லட்சம் கோடி, ஹெட்சிஎப்சி வங்கி ரூ.8.12 லட்சம், இன்போசிஸ் மதிப்பு ரூ.7.35 லட்சம் கோடி, ஐசிஐசிஐ வங்கி மதிப்பு ரூ.5.29 லட்சம் கோடி, ஹெச்யுஎல் மதிப்பு ரூ.5.05 லட்சம் கோடியாகும். எஸ்பிஐ வங்கி மதிப்பு ரூ.4.61 லட்சம் கோடியாகும்.

200 கோடி டாலர் முதலீடு

அதானி குழுமத்தில் உள்ள அதானி க்ரீன் எனர்ஜி நிறுவனத்தின் பங்குகள் விலை 20 சதவீதம் அதிகரித்ததன்விளைவுதான் அதானிக்கு 900 கோடி டாலர் கூடுதலாக சொத்து சேர்ந்தது. அதானி குழுமத்தில் உள்ள 3 முக்கிய நிறுவனங்களில் ஐக்கிய அரபு அமீரகத்தைச்சேர்ந்த இன்டர்நேஷனல் ஹோல்டிங் கம்பெனி 200 கோடி டாலர் முதலீடு செய்ய இருக்கிறது இதைத் தொடர்ந்து பங்குச்சந்தையில் அதானி குழும பங்குகள் தொடர்ந்து உயர்ந்து வருகின்றன.

மென்பொருள் துறையில் கோடீஸ்வரரான லாரி எலிஸனை முந்திய அதானி, உலகிலேயே 6-வது மிகப்பெரிய கோடீஸ்வரர் எனும் பெருமையைப் பெற்றுள்ளார். அதானின் சொத்து மதிப்பு தற்போது கூகுள் நிறுவனத்தின் லாரி பேஜ் மற்றும் செர்ஜி பெரினைவிட அதிகரித்துள்ளது.