எம்.ஜி. மோட்டார்ஸ் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் புதிய 2022 ZS EV மாடலை அறிமுகம் செய்தது.

எம்.ஜி. மோட்டார் இந்தியா நிறுவனம் 2022 ZS EV மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. முன்னதாக 2020 வாக்கில் இந்திய சந்தையில் எம்.ஜி. மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் வாகனமாக ZS EV மாடல் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது. இந்த மாடலின் ஃபேஸ்லிஃப்ட் வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

புதிய 2022 ZS EV மாடல் எக்சைட் மற்றும் எக்ஸ்குளூசிவ் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 21.99 லட்சம் மற்றும் ரூ. 25.88 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 2022 எம்.ஜி. ZS EV மாடலின் எக்சைட் வேரியண்ட் வினியோகம் ஜூலை மாதத்தில் துவங்குகிறது. எக்ஸ்குளூசிவ் வேரியண்ட் வினியோகம் விரைவில் துவங்க இருக்கிறது.

2022 எம்.ஜி. ZS EV மாடலின் முன்புறத்தில் என்க்ளோஸ் செய்யப்பட்ட கிரில், சார்ஜிங் சாக்கெட் எம்.ஜி. லோகோ அருகில் இடது புறத்திற்கு மாற்றப்பட்டு இருக்கிறது. முன்புற பம்ப்பர் மாற்றப்பட்டு கூர்மையான டிசைன், அகலமான ஏர் டேம் கொண்டிருக்கிறது. இந்த மாடலில் 17 இன்ச் அலாய் வீல்கள், பின்புறம் புதிய டெயில் லைட் டிசைன், மேம்பட்ட பம்ப்பர்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் லண்டன் ஐ ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், எல்.இ.டி. டெயில் லைட்கள், ரூஃப் ரெயில்கள், பின்புற ஸ்பாயிலர் உள்ளன. 

புதிய காரின் உள்புறத்தில் மேம்பட்ட இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் பின்புற இருக்கைகளில் ஆம் ரெஸ்ட், தனித்தனி கப் ஹோல்டர்கள், செண்டர் ஹெட்ரெஸ்ட் மற்றும் ரியர் ஏ.சி. வெண்ட்கள் உள்ளன. புதிய ZS EV மாடலில் 50.3 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் மற்றும் பெர்மனண்ட் மேக்ணட் சிக்ரோனஸ் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மோட்டார் 174 ஹெச்.பி. திறன் வெளிப்படுத்துகிறது.

இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 461 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது. மேலும் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 8.5 நொடிகளில் எட்டிவிடும். புதிய ZS EV மாடலில் 10.1 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே கனெக்டிவிட்டி, பானரோமிக் சன்ரூஃப், பவர்டு டிரைவர் சீட் உள்ளது.

இவைதவிர ஆட்டோமேடிக் ஹெட்லேம்ப் மற்றும் வைப்பர்கள், கனெக்டெட் கார் தொழில்நுட்பம், ஆறு ஏர்பேக், ஹில் ஸ்டார்ட் / டிசெண்ட் கண்ட்ரோல், எலெக்டிரானிக் ஸ்டேபிலிட்டி கண்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.