கே.டி.எம். நிறுவனம் 2022 டியூக் 890 R மோட்டார்சைக்கிளை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. 

கே.டி.எம். நிறுவனம் 2022 டியூக் 890 R மோட்டார்சைக்கிள் மாடலை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. இது மிடில்-வெயிட் நேக்கட் மாடல் ஆகும். 2022 மாடல் அட்லாண்டிக் புளூ எனும் புதிய நிறத்தில் கிடைக்கிறது. இது RC16 GP ரேசர் மாடலில் பயன்படுத்தப்பட்ட பலெட்டை நினைவூட்டும் வகையிலான மேட் ஃபினிஷ் செய்யப்பட்டு உள்ளது. இதே நிறம் 1290 சூப்பர் டியூக் R மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது.

'தி சூப்பர் ஸ்கால்பல்' என அழைக்கப்படும் இந்த மோட்டார்சைக்கிள் ஆரஞ்சு நிற டியூபுலர் ஸ்டீல் ஃபிரேம், வீல்கள் மற்றும் ஹெட்லைட்கள் பாடிவொர்க் மீது பொருத்தப்பட்டுள்ளன. இந்த மாடலில் 889சிசி, பேரலெல் டுவின் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 121 ஹெச்.பி. திறன், 99 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், PASC ஆண்டி-ஹாப்பிங் கிளட்ச் வழங்கப்பட்டு இருக்கிறது.

புதிய 2022 கே.டி.எம். டியூக் 890 R மாடலின் மொத்த எடை 166 கிலோ ஆகும். இதில் 14 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஃபியூவல் டேன்க் உள்ளது. இத்துடன் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய WP அபெக்ஸ் சஸ்பென்ஷன், 206mm ரோட் கிளியரன்ஸ் உள்ளது. பிரேக்கிங்கிற்கு முன்புறத்தில் 320mm டிஸ்க், 4 பிஸ்டன்கள் கொண்ட கேலிப்பர்கள், பின்புறம் 240mm டிஸ்க், ஒற்றை பிஸ்டன் கொண்ட மிதக்கும் கேலிப்பர் உள்ளது.

இவைதவிர டயூக் 890 R மாடலில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய பிரெம்போ MCS மாஸ்டர் சிலிண்டர், ரெயின், ஸ்போர்ட் மற்றும் டிராக் (ஆப்ஷனல்) என மூன்று ரைடு மோட்கள், கார்னெரிங் ஏ.பி.எஸ்., சூப்பர்மோட்டோ மோட், கார்னெரிங் டிராக்‌ஷன் கண்ட்ரோல், ஆண்டி-வீலி போன்ற அம்சங்கள் உள்ளன. இந்த மாடல் மட்டுமின்றி டிராக் சார்ந்த புதிய மோட்டார்சைக்கிளை கே.டி.எம். உருவாக்கி வருகிறது. இந்த மாடல் 890 டியூக் GP என அழைக்கப்பட இருக்கிறது. 

புதிய கே.டி.எம். 890 டியூக் GP மாடல் பிப்ரவரி 22 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் RC 8C மாடலில் வழங்கப்பட்டு இருக்கும் சில அம்சங்களும் வழங்கப்பட இருக்கிறது. இந்த மாடல் டியூக் 890 சீரிசில் ஃபிளாக்‌ஷிப் மாடலாக அறிமுகம் செய்யப்படுகிறது.