ரூ.2,000 நோட்டுகளை மாற்றுவது தொடர்பாக, வங்கிகள் தங்கள் சொந்த செயல்முறை மற்றும் விதிகளை பின்பற்றும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
புழக்கத்தில் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக கடந்த 19-ம் தேதி ரிசர்வ் வங்கி அறிவித்தது, மேலும் புழக்கத்தில் இருக்கும் நோட்டுகளை செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் வங்கிகளில் கொடுத்து மாற்றலாம் என்றும் தெரிவித்திருந்தது. மேலும் 2,000 ரூபாய் நோட்டுகள் சட்டப்பூர்வமான தொடரும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அரசு மற்றும் தனியார் வங்கிகள் உட்பட பல வங்கிகள் ரூபாய் நோட்டுகளை மாற்றும் செயல்முறை குறித்து விளக்கம் அளித்துள்ளன.
பணத்தை டெபாசிட் செய்ய விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு, ரொக்க டெபாசிட் தொடர்பான வங்கிகளின் நடைமுறை தொடரும் எனவும், ரூ.2,000 நோட்டுகளை மாற்றுவது தொடர்பாக, வங்கிகள் தங்கள் சொந்த செயல்முறை மற்றும் விதிகளை பின்பற்றும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், வங்கிக் கணக்குகளில் ரூ. 50,000 அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை டெபாசிட் செய்யும் போது பான் அட்டை கட்டாயமாகும். இது ரூ.2,000 நோட்டுகளின் டெபாசிட்களுக்கும் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவது பணமதிப்பிழப்பு அல்ல, சட்டப்பூர்வமான நடவடிக்கை என்றும், செயல்பாட்டு வசதிக்காக அவற்றை மாற்றுவதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கி செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
செயல்பாட்டு வசதிக்காகவும், வங்கிக் கிளைகளின் வழக்கமான செயல்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுவதைத் தவிர்க்கவும், ரிசர்வ் வங்கி, 2,000 ரூபாய் நோட்டுகளை மற்ற வகைகளின் வங்கி நோட்டுகளாக மாற்றிக்கொள்ளும் வகையில், எந்த வங்கியிலும் மே 23 முதல். ஒரே நேரத்தில் 20,000 ரூபாய் வரையில் மாற்றிக்கொள்ளலாம் என்று கூறியுள்ளது.
ரூபாய் 2,000 மதிப்புள்ள வங்கி நோட்டு நவம்பர் 2016 இல் அறிமுகப்படுத்தப்பட்டது, அந்த நேரத்தில் புழக்கத்தில் இருந்த அனைத்து ரூ 500 மற்றும் ரூ 1,000 வங்கி நோட்டுகள் பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட பிறகு, பொருளாதாரத்தின் நாணயத் தேவையை விரைவாகப் பூர்த்தி செய்வதற்காக ரூ.2000 நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன.
2,000 ரூபாய் நோட்டுகள் பொதுவாக பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தப்படுவதில்லை என்பதையும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும், பொதுமக்களின் கரன்சி தேவையை பூர்த்தி செய்யும் வகையில், பிற வகைகளில் உள்ள ரூபாய் நோட்டுகளின் இருப்பு தொடர்ந்து போதுமானதாக உள்ளது ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
