நாட்டில் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு 2 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நோட்டுகளே அதிகளவு கள்ளநோட்டுகளாக பிடிபட்டுள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கருப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிப்பதாகக் கூறி 2016ஆம் ஆண்டின் நவம்பர் மாதம் 8ஆம் தேதி பணமதிப்பழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதாவது, உயர் மதிப்பு நோட்டுகளான ரூ.500, ரூ.1,000 ஆகியவை செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. இவற்றை வங்கிகளில் திருப்பி ஒப்படைக்கும்படி நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டார். இந்த நோட்டுகளுக்குப் பதிலாக புதிய வடிவிலான ரூ.500 மற்றும் ரூ.2,000 நோட்டுகள் புதிய வடிவத்தில் அச்சிடப்பட்டு புழக்கத்துக்கு விடப்பட்டன.

கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்ட மத்திய அரசு புதிய 500 மற்றும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தியது. புதிய  நோட்டுகளில் பல்வேறு உயர் பாதுகப்பு அம்சங்கள் உள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்திருந்தது. ஆனால், 2018ம் ஆண்டை ஒப்பிடும்போது கடந்த 2019ஆம் ஆண்டில் அதிகளவு கள்ளநோட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக, 2019ம் ஆண்டில் 25 கோடி 39 லட்சம் ரூபாய் மதிப்பில் கள்ளநோட்டுகள் பிடிபட்டுள்ளதாக தெரிவித்துள்ள தேசிய குற்ற ஆவணக் காப்பகம், 2018ம் ஆண்டில் 17 கோடி 95 லட்சம் ரூபாய் மதிப்பில்  கள்ளநோட்டுகள் பிடிபட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக, 2019ம் ஆண்டில் எண்ணிக்கையில் 90 ஆயிரத்து  இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் பிடிபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக அளவாக கர்நாடகாவில் 23 ஆயிரத்து 599 இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளும், குஜராத்தில்14 ஆயிரத்து 494 ரூபாய் நோட்டுகளும், மேற்குவங்கத்தில் 13 ஆயிரத்து 63 ரூபாய் நோட்டுகளும் பிடிபட்டுள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது. 2019 மார்ச் 31ஆம் தேதி நிலவரப்படி, 32,910 எண்ணிக்கையில் 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்ததாகவும், இந்த எண்ணிக்கை 2020 மார்ச் 31ஆம் தேதியில் 27,398 ஆகக் குறைந்துவிட்டதாகவும்  மத்திய நிதித்துறை இணையமைச்சரான அனுராக் தாகூர் தெரிவித்து இருந்தார்.