காளையின் ஆதிக்கம்: பட்ஜெட்டால் பங்குச்சந்தையில் உற்சாகம், உயர்வு
மத்திய பட்ஜெட் நாளை தாக்கல், பொருளாதார ஆய்வறிக்கையில் சாதகமான அம்சங்கள், பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இந்தியா தயாராக இருப்பது, வளர்ச்சியை நோக்கிய பயணம் ஆகியவற்றால் பங்குச்சந்தையில் காளையின் ஆதிக்கம் இன்று இருந்தது.
மத்திய பட்ஜெட் நாளை தாக்கல், பொருளாதார ஆய்வறிக்கையில் சாதகமான அம்சங்கள், பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இந்தியா தயாராக இருப்பது, வளர்ச்சியை நோக்கிய பயணம் ஆகியவற்றால் பங்குச்சந்தையில் காளையின் ஆதிக்கம் இன்று இருந்தது.
இதனால் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ், தேசியப்பங்குச்சந்தையில் நிப்டி ஆகியவை உயர்வுடன் முடிந்தன.
2021-22 பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். அதில், “ 2022-23-ம் (ஏப்ரல்2022-மார்ச்2023) நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8% முதல் 8.5% வரை உயரும் எனத் தெரிவிக்கப்பட்டது”. இந்த வார்த்தை முதலீட்டாளர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
இதனால் வர்த்தகத்தின் இடையே சென்செக்ஸ் புள்ளிகள் 1000 வரை உயர்ந்து வர்த்தகம் முடிவில் 814 உயர்வுடன் 58,014 புள்ளிகளில் முடிந்தன. தேசியப் பங்குச்சந்தையான நிப்டியில் வர்த்தகம் முடிவில் 238 புள்ளிகள் உயர்ந்து, 17,340 புள்ளிகள் ஏற்றத்துடன் முடிந்தன.
தகவல்தொழில்நுட்பத்துறை பங்குகளான விப்ரோ, இன்போசிஸ், ஹெச்சிஎல் டெக், டெக் மகிந்திரா, பிபிசிஎல், டாடா மோட்டார்ஸ், நிதித்துறை பங்குகளான பஜாஜ், எஸ்பிஐ, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், பார்தி ஏர்டெல் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் முடிந்தன.
அதேசமயம், இன்டஸ்இன்ட் வங்கி பங்குகள் 3.5 சதவீதம் சரிந்தன. 3-ம் காலாண்டு முடிவுகள் மோசமானதாக இருந்ததால் சரிந்தன. கோடக் வங்கி, ஹெச்யுஎல், டாடா ஸ்டீல் யுபிஎல், கோல் இந்தியா ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தன
பட்ஜெட்டில் ரியல்எஸ்டேட், தகவல்தொழில்நுட்பம், வங்கிகளுக்கு அதிக சலுகை இருக்கலாம் என்பதால், இந்த துறைகளின் பங்குகள் நல்ல ஏற்றம் கண்டன. நிப்டியில் பொதுத்துறை வங்கிகளின் பங்குகள் 3 சதவீதம் உயர்ந்தன, தகவல்தொழில்நுட்ப பங்குகள் 2.87 சதவீதம் உயர்ந்தன. ஆட்டோமொபைல், நுகர்வோர் பொருட்கள் பிரிவு, மருந்துத்துறை, மருத்துவத்துறை பங்குகளும் உயர்வில் முடிந்தன