Budget 2022 Income Tax : தெரிஞ்சுக்கலாம்..பட்ஜெட்டில் வருமானவரி மாற்றங்கள் என்ன?
2022-23ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் வருமான வரிவிதிப்பில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் பெரிதாக இல்லை என்றாலும் குறிப்பிட்ட சில பிரிவினருக்கு மட்டும் சலுகைகளை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்துள்ளார்.
2022-23ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் வருமான வரிவிதிப்பில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் பெரிதாக இல்லை என்றாலும் குறிப்பிட்ட சில பிரிவினருக்கு மட்டும் சலுகைகளை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்துள்ளார்.
கடந்த 2014-ம் ஆண்டிலிருந்து வருமானவரி செலுத்தும் தனிநபர்களுக்கு பட்ஜெட்டில் எந்தவிதமான சலுகையும் கிடைக்கவில்லை. கொரோனா காலத்தில் வருமான வரி செலுத்தும் பிரிவினருக்கு நிறுவனங்களில் ஊதியப்பிடித்தம், சம்பளக் குறைப்பு, வேலையிழப்பு போன்றவை ஏற்பட்டதால், 2022-23 ம் ஆண்டு பட்ஜெட்டில் நிச்சயம் ஏதேனும் சலுகை இருக்கும் என எதிர்பார்த்தனர். ஆனால், எந்தவிதமான சலுகையும் இல்லை. வருமானவரி விலக்கு அளிக்கும் அடிப்படை ஆண்டு ஊதியம் ரூ.2.50 லட்சத்திலிருந்து இன்னும் மாற்றப்படாமல் இருந்துவருகிறது. ஆதலால், இந்த ஆண்டும் தனிநபர் வருமானவரி செலுத்துவோருக்கு ஏமாற்றமாகவே இருந்தது.
ஐடிஆர் ஃபைலிங்
வருமான வரி செலுத்துவோர் திருத்தப்பட்ட வருமானவரித் தாக்கலை செலுத்த முன்பு ஓர் ஆண்டுகாலம் அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. அது இந்த பட்ஜெட்டில் மாற்றம் செய்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இதன்படி வரும் நிதியாண்டிலிருந்து இந்த அவகாசம் 2 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வருமானவரி செலுத்துவோர் மீதான நம்பிக்கையை மத்திய அரசு அதிகப்படுத்தியுள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
டிஜிட்டல் சொத்துகளுக்கு 30 %வரி
டிஜிட்டல் கரன்ஸிகளான பிட்காயின் உள்ளிட்டவற்றில் முதலீடு செய்தாலோ அல்லது வருமானம் ஈட்டினாலோ 30 சதவீதம் வரிவிதித்து பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இதன் மூலம் இதுநாள்வரை வரியில்லாமல் டிஜிட்டல் சொத்துக்கள் மீது முதலீடு செய்தவர்களுக்கு செக் வைத்துள்ளது மத்திய அரசு. அதுமட்டுமல்லாமல் டிஜிட்டல் கரன்ஸி மீதான முதலீட்டுக்கு ஆகும் செலவுக்கு மட்டும் ஒரு சதவீதம் டிடிஎஸ் கோரலாம் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது
தேசிய ஓய்வூதிய திட்டம்(என்பிஎஸ்)
மாநில அரசுகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கான என்பிஎஸ் பங்களிப்பு 10 சதவீதத்திலிருந்து 14 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. மாநில அரசுகள் ஊழியர்களுக்கான பங்களிப்புத் தொகையை 14 சதவீதமாக உயர்த்தியிருப்பது நிச்சயம் அவர்களின் எதிர்காலத்துக்கு உதவியாக இருக்கும். ஆனால், இந்த சலுகை அரசு ஊழியர்களோடு நின்றுவிட்டது, தனியார் துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இந்தச் சலுகை இல்லை.
15% வரி
நீண்டகால முதலீட்டில் இருந்து வருமானம் பெருவோருக்கான வரி 15 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வரிக்குறைப்பு
கூட்டுறவு சொசைட்டிகளுக்கான குறைந்தபட்ச மாற்று வரி 18% இருந்தது. வரும் நிதியாண்டு பட்ஜெட்டிலிருந்து 15 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.