budget 2022: Registration: கவனத்தை ஈர்க்கும் ”ஒரே நாடு, ஒரே பதிவு முறை”..சாதக, பாதகங்கள் குறித்து ஒரு அலசல்..
ஒரே நாடு, ஒரே பதிவு முறை என்ற திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் 2022- 2023 ஆம் ஆண்டிற்கான பொது பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, நிதி அமைச்சர் வாசிக்க தொடங்கினார். சுமார் 1.30 மணிநேரம் இடம்பெற்ற பட்ஜெட் 12.30 மணியளவில் முடிவடைந்தது. இந்த பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. டிஜிட்டல் கரன்சி,5ஜி ஏலம்,நதிகள் இணைப்பு திட்டம்,ஒரு வகுப்பு ஒரு தொலைக்காட்சி திட்டம்,60 லட்சம் பேருக்கு வேலை, 400 வந்தே பாரத் ரயில்கள்,அனைத்து கிராமங்களில் இணைய வசதி,ஒரு லட்சம் கோடி வட்டியில்லா கடன், வருமானவரி - 2 ஆண்டு அவகாசம்,கிரிப்டோ கரன்சி - 30% வரி,போன்ற அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
அதே போல இந்த பட்ஜெட்டில் வருமான வரி உச்சவரம்பு குறித்த அறிவிப்பு வெளியாகும் என ஆவலோடு எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறாக வருமானவரி விலக்கு உச்சவரம்பில் மாற்றம் ஏற்படவில்லை, வருமான வரி விலக்கு உச்சவரம்பு 2.5 லட்ச ரூபாயாகவே தொடரும்.மேலும் இதுவரை இல்லாத வகையில் ஜனவரி மாதத்தின் ஜி.எஸ்.டி வருவாய் 1.40,986 கோடியாக அதிகரித்துள்ளது எனவும் கொரோனா பெருந்தொற்றுக்கு இடையே இந்த அளவுக்கு ஜி.எஸ்.டி வரி வசூல் அதிகரித்திருப்பது பொருளாதார மீட்சி நிலையை காட்டுகிறது என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
இந்நிலையில் ஒரே நாடு, ஒரே பதிவு முறை என்ற திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. நில ஆவணங்களை மின்னணுபடுத்தும் முறை செயல்படுத்தப்பட்டு வருகின்றது. நாட்டின் எந்த பகுதியிலிருந்தும் பத்திரப் பதிவை மேற்கொள்ள ஒரே நாடு,ஒரே பதிவு திட்டம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.அதாவது, ஒரே நாடு, ஒரே பதிவு திட்டத்தின் கீழ் மாநில பதிவு தரவுகள் அனைத்தும் ஒரே குடையின் கீழ் இணைக்கப்படுகிறது.
கடந்த 2008-09-ல், இந்தியாவில் வெளிப்படையான மற்றும் ஒருங்கிணைந்த நிலத் தகவல் மேலாண்மை அமைப்பை உருவாக்குவதற்காகவும், நில ஆவணங்களை டிஜிட்டல் மற்றும் நவீனமயமாக்கவும், டிஜிட்டல் இந்தியா நில ஆவணங்கள் நவீனப்படுத்துதல் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.இதன்மூலம், டிஜிட்டல் முறையில் நில அளவீடு செய்து, நில உரிமை விபரங்களை பதிவு செய்தல், ஊரக பகுதி நிலப்பதிவேடுகள் கணினிமயமாக்குதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
அதற்கு பிறகு, 2016-ல் டிஜிட்டல் இந்திய நில ஆவணங்களை நவீனமயமாக்கல் திட்டம் என்று மறு உருவாக்கம் செய்யப்பட்டு, அதற்கான 100% விழுக்காடு நிதியை மத்திய அரசால் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.இதன் கீழ், நாடு முழுவதும் ஆவணங்கள் மற்றும் சொத்துகளின் பதிவுக்காக "ஒரே தேசம், ஒரே மென்பொருள்" என்ற திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இப்போதைக்கு மணிப்பூர், மகாராஷ்ரா, உள்ளிட்ட 10 மாநிலங்களில் ஒரே வகையான மென்பொருள் மூலம் ஆவணங்கள் மற்றும் சொத்துகளின் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாகத்தான், ஒரே நாடு ஒரே பதிவுமுறை கொண்டு வரப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று, அறிவித்துள்ளது பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது.