Budget 2022 : Digital University: டிஜிட்டல் பல்கலைகழகம்..? கல்வித்துறைக்கான அறிவிப்புகள் குறித்த ஒரு பார்வை
டிஜிட்டல் பல்கலைக்கழகம், பிராந்திய மொழிகளில் மாணவர்களின் கல்விக்காக 200 சேனல்கள், 750 விர்ச்சுவல் ஆராய்ச்சிக் கூடங்கள் போன்ற கல்வித்துறைக்கான பல்வேறு அறிவிப்புகள் பட்ஜெட்டில் வெளியாகியுள்ளன.
டிஜிட்டல் பல்கலைக்கழகம், பிராந்திய மொழிகளில் மாணவர்களின் கல்விக்காக 200 சேனல்கள், 750 விர்ச்சுவல் ஆராய்ச்சிக் கூடங்கள் போன்ற கல்வித்துறைக்கான பல்வேறு அறிவிப்புகள் பட்ஜெட்டில் வெளியாகியுள்ளன.
கொரோனா பெருந்தொற்றின் காரணமாக நாட்டில் பள்ளி செல்லும் மாணவர்கள் மட்டுமின்றி கல்லூரி மாணவர்களின் மாணவர்களின் கல்வியும் பாதிக்கப்பட்டது. அதிலும் கிராமப்புறங்களில் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்விகற்றல் பெருந்தொற்றால் மோசமாகப் பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக மீண்டும் மாணவர்கள் கல்வி இடைநிற்றல் போக்கு அதிகரிக்கத் தொடங்கியது.
ஆன்-லைன் வகுப்புகள் மூலம் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கப்பட்டாலும் அதனால் முழுமையான பலன் அனைவருக்கும் கிடைத்தது என்று கூற இயலாது. இந்நிலையில் பட்ஜெட்டில் கல்வித்துறையை ஊக்கப்படுத்தும் வகையில் புதிய அறிவிப்புகள் வரலாம் என எதிர்பார்கப்பட்டது.
அதற்கேற்றார்போல் மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் புதிய அறிவிப்புகளை பட்ஜெட்டில் இன்று அறிவித்துள்ளார். அது குறித்த ஓர் பார்வை
மத்திய பட்ஜெட்டில் கல்விக்கான அறிவிப்புகளில் மிக முக்கியமானது டிஜிட்டல் பல்கலைக்கழகமாகும்.
டிஜிட்டல் பல்கலைக்கழகம் என்றால் என்ன?
டிஜிட்டல் பல்கலைக்கழகம் என்பது நாடுமுழுவதும் உள்ள மாணவர்களுக்கு உலகத் தரம்வாய்ந்த வகையில் அவர்களின் வீடுகளுக்கே தரமான கல்வியை கொண்டு வந்து சேர்ப்பதாகும். “ஹப் அன்ட் ஸ்போக்” மாடலில் இந்த டிஜிட்டல் பல்கலைக்கழம் செயல்படும். அதாவது ஹப் என்பது, நாட்டில் உள்ள சிறந்த பல்கலைக்கழகங்கள் ஒன்றாக இணைந்து ஒரு தளத்தின் கீழ் ஒருங்கிணைவதாகும். ஸ்போக் என்பது மாணவர்கள் நாட்டின் எந்த இடத்திலிருந்தும் தங்களுக்குத் தேவையான மொழிகளில் பல்கலைக்கழகங்களில் சேர்ந்து டிஜிட்டல் முறையில் கல்வி கற்பதாகும். இந்த டிஜிட்டல் பல்கலைக்கழகத்தில் பல்வேறு மாநில மாணவர்களும் எளிதாக அணுகும்வகையில் பல மொழிகளைக் கொண்டதாக இருக்கும்.
இந்த டிஜிட்டல் பல்கலைக்கழகம் உருவாக்கும் திட்டம் பட்ஜெட்டில் முக்கியமானதாகும்
- பிரதமரின் இ-வித்யா திட்டத்தின் கீழ் ஒரு வகுப்பு-ஒரு சேனல் திட்டம் கொண்டுவரப்பட உள்ளது. இதன்படி 1-ம்வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பல்வேறு மொழிகளில் 200 கல்விச் சேனல்கள் தொடங்கப்படும்.
- மாணவர்களின் சிந்தனைத் திறன், புத்தாக்கத் திறனை மேம்படுத்தும் வகையில் கணிதம் மற்றும் அறிவியலுக்காக 750 மெய்நிகர் ஆய்வகங்கள் உருவாக்கப்படும். திறமையை மேம்படுத்தும் வகையில் 75 திறன்மேம்பாட்டு மெய்நிகர் ஆராய்ச்சிக்கூடங்களும் வரும் நிதியாண்டில் உருவாக்கப்படும்
- அனைத்து மொழிகளிலும் மாணவர்கள் திறமையாக பேசும் வகையில் இணையதளம், மொபைல்போன், தொலைக்காட்சி, வாணொலி வாயிலாக டிஜிட்டல் ஆசிரியர்கள் கொண்டு கற்பிக்கப்படும்.
- நகர்புற திட்டமிடல் மற்றும் வடிவமைப்பில் சிறப்பு நிபுணத்துவம் பெறுவதற்காக பல்வேறு மண்டலங்களில் ஏற்கெனவே இருக்கும் கல்விக்கூடங்கள் மேம்படுத்தப்படுத்தப்படும். இதற்காக ஒவ்வொரு மண்டலத்துக்கும் ரூ.250 கோடி செலவிடப்படும். ஏஐசிடிஇ அமைப்பின் மேற்பார்வையில் நகர்புற வடிவமைப்பு குறித்த பாடங்கள், பாடப்பிரிவுகள் கொண்டு செல்லப்படும்.
- குஜராத் சர்வதேச நிதி தொழில்நுட்ப(கிப்ட்) நிறுவனத்தில் உலகத் தரம்வாய்ந்த வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள், கல்விநிறுவனங்கள் பாடப்பிரிவுகளை வழங்க அனுமதி வழங்கப்படும். குறிப்பாக நிதி மேலாண்மை, நிதி தொழில்நுட்பம், அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகியவற்றில் முக்கியத்துவம் வழங்கப்படும்
இவ்வாறு பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன