Budget 2022:இன்னும் சற்று நேரத்தில் பட்ஜெட் தாக்கல்.. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றம் வருகை..
மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது 4-வது பட்ஜெட்டைத் தாக்கல் செய்வதற்காக நாடாளுமன்றத்துக்கு வந்து சேர்ந்தார்.
மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது 4-வது பட்ஜெட்டைத் தாக்கல் செய்வதற்காக நாடாளுமன்றத்துக்கு வந்து சேர்ந்தார். முன்னதாக, நிர்மலா சீதாராமன், இணை அமைச்சர்கள் டாக்டர் பாகவத் கிஷன்ராவ்காரத், ஸ்ரீ பங்கஜ் சவுத்ரி, மூத்த அதிகாரிகள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை இன்று காலை மரியாதை நிமித்தமாகச் சந்தித்து வாழ்த்துப் பெற்றபின் நாடாளுமன்றம் வந்துள்ளனர். சரியாக காலை 11.மணிக்கு நிர்மலா தனது பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.
மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தான் தாக்கல்செய்த முதல் பட்ஜட்டெலிருந்து வழக்கமான சிவப்பு நிற ப்ரீப்கேஸைத் தவிர்த்து பாரம்பரியமான பகி கட்டா துணியில் பட்ஜெட் ஆவணங்களைக்கொண்டுவந்தார். ஆனால், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஆண்டு முதல்முறையாக காகிதமில்லா பட்ஜெட்டை நிர்மலா தாக்கல் செய்தார். இதனால் பகிகட்டாவுக்குப் பதிலாக டேப்ளட்டை நிர்மலா கொண்டுவந்தார், இந்த ஆண்டு பெருந்தொற்று பரவல் இருப்பதாலும், காகிதப்பயன்பாட்டை குறைக்கவும் 2வது முறையாக டேப்ளட்டுடன் நிர்மலா பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.
பெரும்பாலும் இந்த பட்ஜெட்டில் வரிவிதிப்பு வீதங்களில் எந்தவிதமான மாற்றமும் இருக்காது என்றே பொருளாதார வல்லுநர்கள் கருத்தாக இருக்கிறது. அதேநேரம், கொரோனா பரவல் காரணாக அரசுக்கு ஏராளமான செலவுகள் ஏற்பட்டுள்ளதால், அதை சமாளிக்கும் வகையில் அரசின் பங்குகளை விற்பனை செய்வது தொடர்பாக புதிய அறிவிப்புகள் வெளியாகலாம்.
கொரோனா பரவல் ஏற்பட்டதிலிருந்து மத்திய அரசுக்கான பட்ஜெட் செலவு அதிகரித்துள்ளது. இதனால் ஜிடிபியில் மத்தியஅரசின் நிதிப்பற்றாக்குறை 6% அதிகமாக இருக்கலாம் என கணக்கிடப்படுகிறது. ஆனால், வரும் நிதியாண்டில் நிதிப்பற்றாக்குறை அளவை 6.1%அளவில் வைத்திருக்க நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இலக்கு வைப்பார் என கணிப்புகள் தெரிவிக்கின்றன. நடப்பு நிதியாண்டில் அரசின் நிதிப்பற்றாக்குறை 6.8% என விரிவடைந்துவிட்டது.
2022-23 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்யப்பட உள்ளது. இதில், வீட்டில் இருந்து பணியாற்றுவோர்(work from home) வரிச்சலுகை அளிக்கப்படலாம் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும், கொரோனா காலத்தில் வீட்டிலிருந்தே பணிபுரிபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது, இனியும் பலரும் வீட்டிலிருந்தே பலரும் பணிபுரிய விரும்புகிறார்கள். வீட்டிலிருந்து பணிபுரிவதன் மூலம் கூடுதலாக மின்சாரம், இணையதளம், மருத்துவச் செலவு, உணவு ஆகியவற்றுக்கான செலவை ஈடுகட்ட சலுகை அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கபடுகிறது.