12:37 PM (IST) Feb 01

இந்தமுறையும் ஏமாற்றம்….தனிநபர் வருமானவரிவிதிப்பில் மாற்றமில்லை

வரும் 2022-23ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டிலும் தனிநபர் வருமானவரிவிதிப்பில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த 2014ம் ஆண்டிலிருந்து தனிநபர் வருமானவரி விதிப்பில் மாற்றம் ஏதும் செய்யப்படாமல் இருந்து வருகிறது. கொரோனா பெருந்தொற்று காரணமாக மக்கள் செலவிடுவதை ஊக்கப்படுத்தும்வகையில் தனிநபர் வருமானவரிவிதிப்பில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த முறையும் ஏமாற்றமே மிஞ்சியது

12:34 PM (IST) Feb 01

வைரங்கள், ஆபரணக் கற்களுக்கான வரிக் குறைப்பு

இறக்குமதி செய்யப்படும் வைரங்கள், ஆபரணக் கற்களுக்கு வரி 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.மொபைல் சார்ஜர், கேமிரா லென்ஸ் உள்ளிட்டவற்றுக்கான வரி குறைக்கப்பட்டுள்ளது.

12:31 PM (IST) Feb 01

பிட் காயினை பரிசளித்தாலும் வரி

வரும் 2022-23ம் ஆண்டிலிருந்து பிட் காயின் மூலம் வருமானம் ஈட்டினால் 30 சதவீதம் வரி விதிக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். அதேபோல பிட்காயினை யாருக்கேனும் பரிசளித்தால், பரிசு பெறுவோருக்கு வரி விதிக்கப்படும். டிஜிட்டல் சொத்துக்களை பரிமாற்றம் செய்யும்போது ஒரு சதவீதம் டிடிஎஸ் பெற்றுக்கொள்ளலாம்.

12:28 PM (IST) Feb 01

மாநில அரசு ஊழியர்களுக்குச் சலுகை

மாநில அரசுகளில் பணிபுரியும் ஊழியர்கள் என்பிஎஸ்க்கு அளிக்கும் பங்களிப்புத் தொகை 14 சதவீதமாக இருந்து வந்தது. இது வரும் நிதியாண்டிலிருந்து இந்த தொகை 14 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

12:26 PM (IST) Feb 01

பிட் காயின் வருமானத்துக்கு வரி

பிட்-காயின் மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு 30 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

12:23 PM (IST) Feb 01

2 ஆண்டுகள் அவகாசம்

திருத்தப்பட்ட வருமானவரி கணக்கைத் தாக்கல் செய்ய ஓர் ஆண்டு அவகாசம், 2 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு சொசைட்டிக்கான வரி 18.5சதவீதத்திலிருந்து 15 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

12:20 PM (IST) Feb 01

ரூ.10.68 லட்சம் கோடியில் மூலதனச் செலவு

2022-23ம் ஆண்டில் மத்திய அரசு பட்ஜெட்டில் ரூ.10.68 லட்சம் கோடிக்கு முதலீட்டுக்கான செலவு செய்ய இருக்கிறது. இது நாட்டின் ஜிடிபியில் 4.1 சதவீதமாகும். வரும் நிதியாண்டில் மத்திய அரசின் நிதிப்பற்றாக்குறை 6.4% அளவில் இருக்கும். நடப்பு நிதியாண்டு பட்ஜெட்டில் நிதிப்பற்றாக்குறை 6.8% இருக்கும் என மதிப்பிடப்பட்டது, ஆனால், 6.9% என அதிகரிக்கும்

12:11 PM (IST) Feb 01

டிஜிட்டல் கரன்ஸி அறிமுகம்

2022-23ம் ஆண்டில் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் புதிதாக டிஜிட்டல் கரன்ஸி அறிமுகப்படுத்தப்படும். டிஜிட்டல் கரன்ஸியை ரிசர்வ் வங்கி மூலம் அறிமுகப்படுத்தும்போது, பொருளாதாரத்துக்கு இன்னும் ஊக்கமாக இருக்கும். எளிதாக பயன்படுத்தும் வகையிலும், பணத்தை எளிதாக கையாளும் வகையிலும் டிஜிட்டல் கரன்ஸி இருக்கும்.

12:06 PM (IST) Feb 01

கிராமங்களில் ஆப்டிகல் ஃபைர் கேபிள்

கிராமங்களில் ஆப்டிகல் ஃபைர் கேபிள்

2022-23ம் ஆண்டில் பாரத் நெட் திட்டத்தின் கீழ் கிராமங்களில் கண்ணாடி இழைக் கேபிள் பதிக்கப்படும். இதற்காக அரசு தனியார் நிறுவனங்கள் கூட்டுடன் இந்ததிட்டம் செயல்படுத்தப்படும். சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் வகையில் இந்த திட்டம் இருக்கும்.

12:02 PM (IST) Feb 01

பாதுகாப்புத்துறையில் உள்நாட்டு உற்பத்தி முக்கியத்துவம்

பாதுகாப்புத்துறை மற்றும் ஆராய்ச்சிக்கான பட்ஜெட் ஒதுக்கீட்டில் 25% தொகை பாதுகாப்புத்துறைக்கான தளவாடங்களை உற்பத்தி செய்யும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களை உருவாக்க ஊக்கமளிக்கப்படும்.

 டிஆர்டிஓ அமைப்புடன் இணைந்து ராணுவத்துக்கு தேவையான ஆயுதங்கள், தளவாடங்களை தயாரிக்கவும், வடிவமைக்கவும் தனியார் நிறுவனங்கள் அனுமதிக்கப்படும்.

2022-23ம் நிதியாண்டில் பாதுகாப்புத்துறையில் 68 % கொள்முதல்கள் உள்நாட்டில் இருக்கும் நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும்.

11:57 AM (IST) Feb 01

இந்த ஆண்டிலேயே 5ஜி மொபைல் சேவை

2022-23ம் நிதியாண்டிலேயே 5ஜி மொபைல் சேவை தொடங்கப்படும். இதற்காக ஸ்பெக்ட்ராம் ஏலம் விரைவில் தொடங்கப்படும். கிராமப்புறங்களிலும், தகவல் தொடர்பு இல்லாத இடங்களிலும் பிராட்பேண்ட் இணைப்பு வசதிகிடைக்க முக்கியத்துவம் வழங்கப்படும். மின்சாரத்தில் இயக்கப்படும் கார்கள், இரு சக்கர வாகனங்கள் உற்பத்திக்கு ஊக்கமளிக்கப்படும் அதற்கான கொள்கை உருவாக்கப்படும்.

11:52 AM (IST) Feb 01

பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தில் 60 ஆயிரம் வீடுகள்

2022-23ம் ஆண்டுக்குள் ஏழைகளுக்கு 80 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்படும். 2022-23ம் ஆண்டில் பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தில் 60ஆயிரம் வீடுகள் கிராமங்கல், நகர்ப்புறங்களில் கட்டப்படும். நகர்புறங்களை மேம்படுத்தவும், திட்டமிடவும் பொருளாதார வல்லுநர்கள், நகர வடிவமைப்பாளர்கள், தேர்ந்த பொறியியல் வல்லுநர்களைக் கொண்ட குழு அமைக்கப்படும்.

11:48 AM (IST) Feb 01

ரூ.60ஆயிரம் கோடியில் 3.80 கோடி வீடுகளுக்கு குடிநீர் வசதி

3.80 கோடி வீடுகளுக்கு குடிநீர் வசதி வழங்க வரும் நிதியாண்டில் ரூ.60 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும். அனைவரையும் உள்ளடங்கியதாக வளர்ச்சிஇருக்க வேண்டும். 2023ம் ஆண்டுக்குள் அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் வசதி வழங்கி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

11:45 AM (IST) Feb 01

சிப்-பொருத்தப்பட்ட பாஸ்போர்ட்


மல்டி-மாடல் சரக்குப் போக்குவரத்து பூங்கா உருவாக்க 2022-23ம் ஆண்டில் 4 நகரங்களில் புதிய ஒப்புதல் வழங்கப்படும். பாஸ்போர்ட்களில் சிப் பொருத்தப்பட்டு இ-பாஸ்பாோர்ட் வழங்கப்படும். 

11:44 AM (IST) Feb 01

வங்கி சேவையில் 1.50 லட்சம் தபால் நிலையங்கள்


வங்கி சேவைக்குள் 1.50 லட்சம் தபால் நிலையங்கள் கொண்டுவரப்படும். இணையதள வங்கிச் சேவை, ஏடிஎம் வசதி, பணப்பரிமாற்றம், தபால்நிலையத்திலிருந்து வங்கிகளுக்கு இணையதளம் மூலம் பரிமாற்றம் செய்யும் வசதி செய்யப்படும். இதன் மூலம் கிராமப்புறங்களில் இருக்கும் முதியோர், மக்கள் அதிகமாகப் பயன்பெறுவார்கள், நிதி வசதி மேம்படும்

11:38 AM (IST) Feb 01

மாணவர்களுக்கு 200 கல்வி சேனல்கள்


டிஜிட்டல் முறையில் கற்பித்தல் ஊக்குவிக்கப்படும். டிஜிட்டல் பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்படும். ஒரு வகுப்பு ஒரு தொலைக்காட்சி என்ற முறையில் 1முதல் 12ம் வகுப்பு வரை மாநில மொழிகளில் 200 சேனல்கள் புதிதாக உருவாக்கப்படும். 

11:36 AM (IST) Feb 01

ஏழைகளுக்கு 18 லட்சம் வீடுகள்

பிரதமரின் வீ்ட்டு வசதிதிட்டத்தின் மூலம் ஏழைகளுக்கு 18 லட்சம் வீடுகள் கட்ட ரூ.48ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும். 2023ம் ஆண்டுக்குள் அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கி முடிக்கப்படும். வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க ரூ.60 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும்

11:32 AM (IST) Feb 01

மாநில மொழிக் கல்வி ஊக்குவிக்கப்படும்


1-ம்வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாநில மொழிக் கல்வி ஊக்குவிக்கப்படும். குழந்தைகள் மற்றும் மகளிர் மேம்பாட்டுத்துறையின் திட்டங்கள் மேம்படுத்தப்படும். நாடுமுழுவதும் 2 லட்சம் அங்கன்வாடிகள் மேம்படுத்தப்படும். 

11:28 AM (IST) Feb 01

ரூ.2.37 லட்சம் கோடிக்கு வேளாண் கொள்முதல்


வரும் 2022-23ம் நிதியாண்டில் விவசாயிகளிடம் இருந்து வேளாண் பொருட்களை ரூ.2.37 லட்சம் கோடிக்கு கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாடுமுழுதும் ரசாயன உரங்கள் இல்லாமல் வேளாண்மை செய்ய விவசாயிகள் ஊக்கப்படுத்தப்படுவார்கள்.

11:25 AM (IST) Feb 01

அடுத்த 25 ஆண்டுகளுக்கான பட்ஜெட்டாக இருக்கும்


பிரதமரின் கதிசக்தியின் திட்டம் 7 எஞ்சின்களைக் கொண்டதாக பொருளாதாரத்துக்கு ஊக்கம் அளிக்கும். 2023ம் ஆண்டுக்குள் 2000கி.மீ தொலைவுக்கு ரயில்வே பாதை மேம்பாடு. உற்பத்தி அடிப்படையிலான ஊக்கத்தொகைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது,ஆத்ம நிர்பார் பாரத் திட்டத்தை ஊக்கப்படுத்தியுள்ளது. இதனால் 6 லட்சம் வேலைவாய்புகள் உருவாகியுள்ளன.