Budget 2022: ஒரு ரூபாய் கூட புதிதாக வரி உயர்த்தவில்லை..நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்..
இந்த வருடம் வரியை உயர்த்தி ஒரு பைசா கூட சம்பாதிக்க முயற்சிக்கவில்லை என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இந்த வருடம் வரியை உயர்த்தி ஒரு பைசா கூட சம்பாதிக்க முயற்சிக்கவில்லை என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் 2022-2023 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
இதை தொடர்ந்து அவர் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,கடந்த வருடமும், இந்த வருடமும் வரியை உயர்த்தி நான் ஒரு பைசா கூட சம்பாதிக்க முயற்சிக்கவில்லை. பற்றாக்குறை இருந்தபோதிலும் கொரோனா சூழலில் மக்கள் மீது வரி சுமை ஏற்றக்கூடாது என பிரதமர் மோடி எங்களுக்கு தெளிவாக அறிவுறுத்தியுள்ளார்.
மத்திய ரிசர்வ் வங்கி ஒரு டிஜிட்டல் நாணயத்தை வெளியிடும், கிரிப்டோ மற்றும் கிரிப்டோ சொத்துக்கள் என்ன என்பது பற்றி இப்போது எந்த விவாதமும் தேவை இல்லை. கிரிப்டோ கரன்சி குறித்து சம்பந்தப்பட்டவர்களுடன் ஆலோசனை நடந்து வருகிறது. டிஜிட்டல் சொத்துகள் குறித்த விவரம் ஆலோசனைக்கு பிறகு தெரியவரும்.
வேலையிழப்பு மற்றும் பணவீக்கத்தை சரி செய்ய நாங்கள் முயற்சி செய்து வருகிறோம். எங்கள் அரசு பணவீக்கத்தை இரண்டு இலக்க எண்ணில் செல்வதற்கு அனுமதிக்காது. 2014-ம் ஆண்டுக்கு முன் பணவீக்கம் 10, 11, 12, 13 என இருந்தது.
கொரோனா பெருந்தொற்று உலகம் முழுவதும் பலரையும் வேலை இழக்க செய்துள்ளது. ஆனால் நம்முடைய ஆத்மநிர்பார் பாரத் தொகுப்பு பலரது வேலையை பாதுகாத்துள்ளது. வேலை இழந்தவர்களுக்கும் பல்வேறு திட்டங்கள் மூலம் நாங்கள் உதவி வருகிறோம். நாங்கள் எதையுமே செய்யவில்லை என எங்கள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு நியாயம் அல்ல என்று இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.