கிளாசிக் தோற்றம், சிறந்த சாலைப் பயண அனுபவம் என இரண்டையும் விரும்புவோருக்கு ஏற்ற பைக்.

ராயல் என்ஃபீல்டு தனது பைக்குகளில் தொடர்ந்து மேம்பாடுகளைச் செய்து வருகிறது. இன்ஜின்கள் மேம்படுத்தப்பட்டு, ஸ்டைலான தோற்றத்துடன், நவீன காலத்திற்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், புதிய ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 650 ஒரு காலத்தால் அழியாத வடிவமைப்பைக் கொண்டுள்ளது.

கவர்ந்து இழுக்கும் கம்பீரம்

கருப்பு நிற கிளாசிக் 650 பார்ப்பதற்கு மிகவும் கவர்ச்சிகரமானது. அதன் அடர் கருப்பு நிறம், வெள்ளி நிற கார்டு, பெட்ரோல் டேங்க்கில் உள்ள தங்க நிற கோடுகள், இரட்டை சிலிண்டர், ஹெட்லைட் என அனைத்தும் சேர்ந்து ஒரு அற்புதமான தோற்றத்தை அளிக்கின்றன. ஓட்டுநர் அமரும்போது அழகாக இருப்பது மட்டுமின்றி, பைக் நிறுத்தப்படும் இடத்திற்கும் ஒரு கம்பீரத்தை சேர்க்கிறது.

ஓட்டிப்பாக்க தோன்றும் அழகு.!

கிளாசிக் தோற்றமும், சிறந்த சாலைப் பயண அனுபவமும் வேண்டுவோருக்கு ஏற்ற பைக் இது. 648 சிசி இன்ஜின், 6 ஸ்பீடு கியர் கொண்ட இந்த பைக் மிகவும் சக்தி வாய்ந்தது. 243 கிலோ எடை கொண்ட இந்த பைக், குறைந்த வேகத்தில் சிறந்த சமநிலையை அளிக்கிறது. ஆனால் அதிக சேறு நிறைந்த சாலைகளில் செல்வதைத் தவிர்ப்பது நல்லது. எடை காரணமாக சற்று சிரமமாக இருக்கலாம். குறிப்பாக தனியாக பயணிக்கும்போது பைக்கைக் கையாள்வது சற்று கடினமாக இருக்கலாம்.

ஜம்முன்னு போகலாம்.! ஜாலியா டூருக்கு.!

800 மிமீ இருக்கை உயரம் கொண்டதால், சராசரி உயரம் உள்ளவர்களும் இந்த பைக்கை எளிதாக ஓட்ட முடியும். இதன் சத்தமும் மிகவும் இனிமையானது. வேகத்தை அதிகரிக்கும்போது சிறப்பாகச் செயல்பட்டாலும், சூப்பர் மீட்டியோர் 650 உடன் ஒப்பிடும்போது சற்று பின்தங்கியிருக்கலாம். ராயல் என்ஃபீல்டின் கிளாசிக் சீரிஸுக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டம் உண்டு. அவர்கள் கிளாசிக்கை விட்டுக்கொடுக்க மாட்டார்கள், கிளாசிக் பைக்கும் அவர்களை விட்டுக்கொடுக்காது. எனவே, இந்த 650 பைக் கிளாசிக் பிரியர்களுக்கு ஒரு சிறந்த தேர்வாகும். நான்கு நிறங்களில் கிடைக்கும் இந்த பைக்கின் ஆரம்ப விலை ரூ.3,36,610.