மின்சார வாகனச் சந்தையில் புதிய மைல்கல்! ஓராண்டில் 11 லட்சம் வாகனங்கள் விற்பனை
கடந்த நிதி ஆண்டில் முதல் முறையாக மின்சார வாகனங்களின் விற்பனை 10 லட்சம் வாகனங்கள் என்ற மைல்கல்லைத் தாண்டி சாதனை புரிந்துள்ளது.
இந்தியாவில் மின்சார வாகனங்களின் விற்பனை கடந்த நிதியாண்டில் முதன்முறையாக ஒரு மில்லியனைத் தாண்டியுள்ளது. இருப்பினும் இருசக்கர வாகனப் பிரிவில் நிதி ஆயோக் நிர்ணயித்த இலக்குகளில் கணிசமான பின்னடைவு ஏற்பட்டுள்ளது என மின்சார வாகனங்கள் உற்பத்தியாளர்கள் சங்கம் (SMEV) கூறியுள்ளது.
மின்சார வாகனங்கள் உற்பத்தியாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், கடந்த நிதி ஆண்டில் 11,52,021 மின்சார வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. இதில் பேருந்துகள், கார்கள், மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் மின்சார பவர் ட்ரெயினில் இயங்கும் இரு சக்கர வாகனங்கள் ஆகியவை அடங்கும்.
நாட்டின் ஒட்டுமொத்த மின்சார வாகன விற்பனையில் இருசக்கர வாகனங்கள் பெரும்பகுதியைக் கொண்டுள்ளன. ஆனால், போதிய அளவு அரசின் மானியத் தொகைகள் இல்லாததால் விற்பனையில் நிர்ணயித்த இலக்கை அடையமுடியவில்லை எனவும் சங்கம் கூறியுள்ளது.
நுகர்வோர் தேவை குறைவினால் விற்பனை இலக்கை எட்ட முடியாமல் போகவில்லை. மாறாக, ரூ.1,200 கோடிக்கும் அதிகமான மானியத் தொகை திடீரென நிறுத்தி வைக்கப்பட்டது மின்சார இருசக்கர வாகன விற்பனையைப் பாதித்துவிட்டது எனவும் மின்சார வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் சொல்கிறது.
இந்தியாவில் மின்சார வாகனங்களின் விரைவான உற்பத்தி மற்றும் பயன்பாட்டுக்கான ஃபேம் (FAME) திட்டத்தின் இரண்டாவது கட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் இருசக்கர வாகனங்களின் விலை 35 சதவீதம் வரை குறைந்துள்ளது என மின்சார வாகன உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சொஹிந்தர் கில் கூறுகிறார்.
FY23ல் 3.8 கோடி கார்கள் விற்பனை! டாப் விற்பனையில் ஹூண்டாய், டாடா, மஹிந்திரா, கியா நிறுவனங்கள்!