Today Pradosham: இன்று செவ்வாய் பிரதோஷ நாளில் சிவபெருமானுக்கு செய்ய வேண்டிய சிறப்பு பூஜைகள், பஞ்சாட்சர மந்திரத்தை உச்சரிக்கும் முறை மற்றும் விரதத்தை எவ்வாறு நிறைவு செய்வது என்பதை இந்தத் தொகுப்பில் காணலாம்.
செவ்வாய் பிரதோஷம்
சிவபெருமானை வழிபடுவதற்கு மிகவும் சிறப்பான நாளாகக் கருதப்படும் செவ்வாய் பிரதோஷம் இன்று ஆகஸ்ட் 25-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. தேய்பிறை மற்றும் வளர்பிறை காலங்களில் வரும் திரயோதசி திதியின் மாலை நேரமே பிரதோஷ காலமாகக் கருதப்படுகிறது. இந்த பிரதோஷம் செவ்வாய்க்கிழமையுடன் இணைந்து வருவதால் இது செவ்வாய் பிரதோஷம் அல்லது “பௌம பிரதோஷம்” என அழைக்கப்படுகிறது.
பிரதோஷ பூஜை நேரம்
பஞ்சாங்க கணக்குப்படி, இன்று மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை பிரதோஷ வழிபாட்டிற்கான நேரமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் சிவாலயத்திற்கு சென்று சிவபெருமானையும், நந்தி பகவானையும் மனமுருகி தரிசிப்பது சிறப்பானதாகக் கருதப்படுகிறது.
செவ்வாய் பகவானின் ஆதிக்கம் கொண்ட நாளில் வரும் பிரதோஷம் என்பதால், கடன் சுமை, நிலம் மற்றும் சொத்து தொடர்பான பிரச்சினைகளில் நல்ல தீர்வு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. செவ்வாய் பூமி காரகன் என்பதால் வீடு, மனை, நிலம் உள்ளிட்ட விஷயங்களில் உள்ள தடைகள் நீங்க வேண்டியும் பக்தர்கள் வழிபடுகின்றனர்.
அபிஷேகப் பொருட்கள்:
சிவபெருமானுக்கும், நந்திகேஸ்வரருக்கும் பால், தயிர், தேன், நல்லெண்ணெய்,இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம் மற்றும் விபூதி உள்ளிட்ட பொருட்களை அபிஷேகத்திற்கு வழங்கலாம். வீட்டில் விடுவீர்கள் சிவலிங்கத்திற்கு தூய நீரால் அபிஷேகம் செய்து, விபூதி மற்றும் சந்தனம் வைத்து வழிபடலாம்.
அர்ச்சனை
இந்த நன்நாளில் சிவபெருமானுக்கு மிகவும் உகந்ததாகக் கருதப்படும் வில்வ இலை மற்றும் செவ்வரளிப் பூக்களை சமர்ப்பித்து அர்ச்சனை செய்யலாம். நந்திகேஸ்வரருக்கு அருகம்புல் மாலை அணிவித்து, பச்சரிசி மற்றும் வெல்லம் படைத்து, நெய் தீபம் ஏற்றுவது சிறப்பான வழிபாடாகக் கருதப்படுகிறது.
108 முறை சொல்ல வேண்டிய பஞ்சாட்சர மந்திரம்
பிரதோஷ காலத்தில் அமைதியாக அமர்ந்து “ஓம் நம சிவாய” என்ற பஞ்சாட்சர மந்திரத்தை 108 முறை ஜபிப்பது சிறப்பு. சிவபெருமானின் அருளைப் பெறவும், மன அமைதி மற்றும் குடும்ப நலன் வேண்டியும் பக்தர்கள் இந்த வழிபாட்டை மேற்கொள்கின்றனர்.
விரதத்தை எவ்வாறு நிறைவு செய்வது?
பிரதோஷ விரதம் இருப்பவர்கள் மாலை சிவ பூஜை நிறைவடைந்த பிறகு, சிவபெருமானுக்கு நிவேதனம் செய்யப்பட்ட உணவு அல்லது கோயிலில் வழங்கப்படும் பிரசாதத்தை உண்டு விரதத்தை நிறைவு செய்யலாம்.


