Thulam Rasi October Month Rasi Palangal: அக்டோபர் மாதம் துலாம் ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப் போகிறது என்பது குறித்து பொதுவான பலன்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
அக்டோபர் மாதம் துலாம் ராசியில் கிரகங்களின் நிலை:
சூரியன்: அக்டோபர் 17 ஆம் தேதி வரை சூரியன் துலாம் ராசியின் 12 வது வீட்டில் பயணிப்பார். இதன் காரணமாக உங்களுக்கு சாதகமான சூழல் இருக்காது. அதே சமயம் அக்டோபர் 17 ஆம் தேதி சூரியன் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சியாக இருக்கிறார். இது உங்களுக்கு சிறப்பான பலன்களைத் தரும்.
செவ்வாய்: செப்டம்பர் 13 தேதி துலாம் ராசிக்குள் வந்த செவ்வாய் அக்டோபர் 27 வரை அங்கேயே இருப்பார். அக்டோபர் 27 ஆம் தேதி அவர் தனது சொந்த ராசியான விருச்சிக ராசிக்கு செல்வார். செவ்வாய் கிரகத்தின் இந்த இரண்டு பெயர்ச்சிகளும் நல்லதாக கருதப்படவில்லை. அக்டோபர் 27 ஆம் தேதிக்குப் பிறகு செவ்வாய் பகவான் உங்களுக்கு ஒப்பீட்டளவில் சிறந்த முடிவுகளைத் தரலாம்.
புதன்: அக்டோபர் 3 ஆம் தேதியன்று புதன் துலாம் ராசியில் பயணிக்க இருக்கிறார். புதனின் துலாம் ராசியில் அக்டோபர் 3 முதல் அக்டோபர் 24 வரை இருப்பார். அக்டோபர் 24 ஆம் தேதி புதன் துலாம் ராசியில் இருந்து வெளியேறி விருச்சிக ராசிக்கு செல்கிறார். எனவே அக்டோபர் 24 ஆம் தேதிக்கு பின்னர் புதன் நல்ல பலன்களை தரலாம். ஆனால் அக்டோபர் 24 ஆம் தேதிக்கு முன்பாக புதன் பகவானின் பலன்களை துலாம் ராசிக்காரர்களால் பெற முடியாது.
குரு மற்றும் சுக்கிரன்: அக்டோபர் மாதத்தின் முதல் பகுதியில் குரு பெயர்ச்சி உங்கள் அதிர்ஷ்ட வீட்டில் இருக்கும். இதன் காரணமாக உங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கலாம். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் குரு பகவான் உங்களுக்கு சாதகமான முடிவுகளையே தருவார். சுக்கிரன் அக்டோபர் 9 ஆம் தேதி வரை உங்கள் லாப வீட்டிலும், அதன் பின்னர் 12 ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பார். எனவே சுக்கிர பகவானும் உங்களுக்கு சாதகமான பலன்களை அளிக்க இருக்கிறார். ராகுவின் பெயர்ச்சி ஐந்தாம் வீட்டில் நடைபெற இருப்பது நல்லதாக கருதப்படவில்லை.
பொதுவான பலன்கள்:
அக்டோபர் மாதம் துலாம் ராசிக்காரர்களுக்கு கலவையான அல்லது சராசரி பலன்கள் கிடைக்கக்கூடிய மாதமாக இருக்கும். இந்த மாதம் உங்களுக்கு புதிய வாய்ப்புகளையும், சவால்களையும் கொண்டு வரும் மாதமாக இருக்கலாம். உங்களுடைய இயல்பான சமநிலை மற்றும் நியாயமான அணுகுமுறை இந்த மாதத்தில் உங்களுக்கு பல விஷயங்களில் வெற்றியைத் தேடி தரும். மனதில் தெளிவு மற்றும் பொறுமையுடன் செயல்படுவது உங்களுக்கு சாதகமான பலன்களைத் தரும்.
வேலை மற்றும் தொழில்:
தொழில் ரீதியாக இந்த மாதம் உங்களுக்கு முன்னேற்றம் தரக்கூடிய பல வாய்ப்புகள் தென்படும். பணியிடத்தில் உங்கள் முயற்சிகள் மற்றவர்களால் பாராட்டப்படும். புதிய திட்டங்கள் அல்லது பொறுப்புகளை ஏற்க சரியான நேரமாகும். இருப்பினும் முடிவுகளை எடுக்கும் பொழுது அவசரப்படாமல், அனைத்து விஷயங்களையும் ஆராய்ந்து செயல்பட வேண்டும். வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய கூட்டாண்மைள் அல்லது ஒப்பந்தங்கள் மூலம் லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது.
நிதி நிலைமை:
கிரக நிலைகளில் ஏற்படும் மாற்றங்களால் மாதத்தின் இரண்டாம் பாதியில் உங்களுக்கு நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புகள் உண்டு. ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து லாபம் கிடைக்கலாம். வெளிநாட்டு வணிகம் அல்லது பிற வழிகள் மூலம் நிதி ஆதாயம் கிடைக்கும். நிதி நிலைமை வலுப்படும். தெளிவான திட்டமிடல் மற்றும் கவனத்துடன் செயல்பட வேண்டும். நீண்ட காலத்திற்கு உதவும் நிதி பழக்கங்களில் முதலீடு செய்வீர்கள்.
குடும்ப உறவுகள்:
அக்டோபர் மாதம் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். இருப்பினும் வார்த்தைகளில் கவனம் தேவை. தவறான புரிதல்கள் மூலம் பிரிவு ஏற்பட வாய்ப்புள்ளது. வெளிப்படையான மற்றும் நேர்மையான உரையாடல்கள் மூலம் தவறான புரிதல்களை நீக்க முடியும். பெற்றோர்கள், நண்பர்கள், உறவினர்களிடமிருந்து ஆதரவு கிடைக்கும். இந்த மாதம் உங்களுக்கு மனரீதியான அழுத்தங்கள் ஏற்படலாம். எனவே உணர்ச்சிகளை அடக்கி குடும்பத்துடன் நேரம் செலவிடுவது மன அழுத்தத்தில் இருந்து தவிர்க்க உதவும்.
கல்வி மற்றும் ஆரோக்கியம்:
அதிகமாக யோசிப்பது மன உளைச்சலை ஏற்படுத்தலாம். எனவே உடல்நலத்தில் கவனம் தேவை. அதிகப்படியான தகவல்களை சேமிப்பது, கவலைப்படுவது, குறைவாக ஓய்வு எடுப்பது ஆகியவற்றிலிருந்து விடுபட முயற்சி செய்யுங்கள். முறையான தூக்கம் மற்றும் உணவுப்பழக்கத்தை பின்பற்றுங்கள். மாணவர்கள் இந்த மாதம் கவனச் சிதறல்கள் அல்லது ஊக்கமின்மை போன்ற சவால்களை சந்திக்கலாம். இருப்பினும் நோக்கங்களில் தெளிவுடன் இருந்து, நல்ல வழிகாட்டுதல்களுடன் படித்தால் பயனடைவீர்கள்.
பரிகாரம்:
- அன்பளிப்பாக இருந்தாலும் யாரும் எதை இலவசமாக கொடுத்தாலும் ஏற்றுக்கொள்ளாதீர்கள்.
- ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அருகிலுள்ள கோயிலுக்குச் சென்று அம்பாளை தரிசனம் செய்து மலர்கள் சமர்ப்பித்து வழிபடுங்கள்.
- ஏழைகளுக்கு உணவு அல்லது உதவி செய்வது நல்ல பலன்களைத் தரும்.
இந்த மாதம் எதிர்பாராத சவால்களை எதிர்கொள்ள தயாராக இருங்கள். அதே சமயம் தன்னம்பிக்கை இழக்காதீர்கள். உங்களின் சமநிலையான மனப்பான்மையும், பொறுமையும் உங்களை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)
