எம்.ஜி.ஆர் தொண்டர்கள் தாமரைக்கு வாக்களிக்கலாம்.. ஏன்? விளக்கம் கொடுத்த பாஜக மாநில துணைத்தலைவர் K.P ராமலிங்கம்!

Feb 29, 2024, 9:48 PM IST

நாமக்கல் பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் அவர்கள் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் பல தகவல்களை வெளியிட்டுள்ளார். எம்.பி. தேர்தலில் வெற்றிப்பெற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடும் முயற்சி எடுக்கின்றார் என்றும், மக்கள் ஆதரவு கேட்கின்றோம், கண்டிப்பாக 39 தொகுதியிலும் வெற்றி பெறுவோம் என்றும் கூறினார்.

தமிழகத்திற்கு பிரதமர் எத்தனை முறை வந்தாலும் பாஜக வெற்றி பெற முடியாது என அமைச்சர் சேகர்பாபு கூறிய கருத்துக்கு பதில் அளித்த அவர், சேகர்பாபு வயிற்று எரிச்சலில் பேசுகின்றார் என்றார். பிரதமர் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் அரசியலை நன்கு கவனித்தால் தான் அவர்கள் குறித்து பெருமையாக பேசி வருகின்றார் என்றார் அவர்.

பிரதமருக்கு எம்.ஜி.ஆர் பிடித்த தலைவர் அதனால் பேசுகின்றார். எம்.ஜி.ஆர் திமுகவில் இருந்து விலகும் போது அதிமுக என்ற கட்சியை ஆரம்பிப்பதற்கு முன்பு எம்.ஜி.ஆர். மன்றத்தை உருவாக்கி தாமரை கொடி ஏற்றினார். அப்போது பாஜக இல்லை, ஜனசங்கம் தான் இருந்தது அதற்கு திருவிளக்கு தான் சின்னம்.

1980ல் தான் பாஜக தோன்றியது அதற்கு தான் தாமரை சின்னம், ஆனால் 1972 ல் எம்.ஜி.ஆர் மன்றத்திற்கு தாமரை கொடி அறிமுகம் செய்தார். எம்.ஜி.ஆர் கொடுத்த சின்னம் என தாமரையை சொல்லலாம் ஆகவே எம்.ஜி.ஆர் தொண்டர்கள் தாமரைக்கு வாக்களிக்கலாம் என்றார்.