சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆரூருத்ரா தேர் திருவிழா… பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்!!

Jan 5, 2023, 5:28 PM IST

சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடைபெற்ற ஆரூருத்ரா தேர் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி மாதம் ஆருத்ரா தேர் மற்றும் தரிசன விழா நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் தற்போது மார்கழி மாதம் என்பதால் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தேர் மற்றும் தரிசன விழா கடந்த 28 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து கோவிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் தினமும் இரவு நேரத்தில் நகரின் முக்கிய வீதிகளில் சாமி சிலைகள் ஊர்வலம் நடைபெற்று வந்தது.

இதையும் படிங்க: மீன் வண்டியில் 200 கிலோ கஞ்சா: மடக்கிப் பிடித்த கோவை போலீஸ்

இந்த நிலையில் இன்று காலை 8 மணிக்கு கீழ வீதியில் இருந்து ஆருத்ரா தேர் திருவிழாவுக்குக்கான தேரோட்டம் நடைபெற்றது. இதில் நடராஜர், சிவகாமசுந்தரி, முருகன், விநாயகர், சண்டிகேஸ்வரர் ஆகியோர் எழுந்தருளினர். இதனை தொடர்ந்து இரவு 8 மணிக்கு மேல் தேரில் இருந்து நடராஜர் மற்றும் சிவகாமசுந்தரி உள்ளிட்ட சாமிகளை இறக்கி மேல தாளம் முழங்க ஆயிரங்கால் மண்டபத்திற்கு எடுத்துச் செல்வார்கள். பின்னர் இரவு ஆயிரம் கால் மண்டபத்தில் லட்சார்ச்சனை மற்றும் அதிகாலையில் மகா அபிஷேகம் நடைபெறும்.

இதையும் படிங்க: கோவையில் பிரமிப்பை ஏற்படுத்திய பழங்கால கார் மற்றும் பைக் கண்காட்சி!!

இதனையொட்டி வெள்ளிக்கிழமை மாலை 3 மணியிலிருந்து 4 மணிக்குள் ஆருத்ரா தரிசனம் நடைபெறும். இதில் கலந்து கொள்ள தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாநிலங்கள் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் வருகை தருவார்கள். தேர் மற்றும் தரிசன விழாவில் எந்த அசம்பாவிதமும் நடைபெறாத வகையில் கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.