மாமூல் கேட்டா தர முடியாதா? பழைய இரும்பு கடைக்காரரை கொடூரமாக தாக்கிய மர்ம நபர்கள் - கும்மிடிபூண்டியில் பரபரப்பு

Feb 15, 2024, 11:53 AM IST

கும்மிடிப்பூண்டி அடுத்த சிப்காட் தொழில்பேட்டையை ஒட்டிய புதுபேட்டையில் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்களும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் அதிக அளவில் வாடகை வீடுகளில் தங்கி வாழ்ந்து வருகின்றனர். இதனால் அவர்களை சார்ந்து பலர் மளிகைகடை, காய்கறி கடை, துணிக்கடை, பழைய இரும்பு கடை என பலவிதமான கடைகளை வைத்து தொழில் செய்து வருகின்றனர். 

இந்த நிலையில் வெளிபகுதியை சேர்ந்தவர்கள் அதிக அளவில் வாழும் பகுதி என்பதால் இந்தப் பகுதியில் அடிக்கடி செல்போன் திருட்டு, கொள்ளை, வழிப்பறி, கொலை, கஞ்சா விற்பனை, குட்கா விற்பனை, அடிதடி, மாமுல் வசூலிப்பது என பல்வேறு சட்டவிரோத செயல்கள் அதிக அளவில் நடைபெறுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

அந்த வகையில் நேற்று முன் தினம் புதுப்பேட்டை பகுதியில் தூத்துக்குடியைச் சேர்ந்த மகேஸ்வரன் (வயது 32) பல ஆண்டுகளாக இரும்பு கடை நடத்தி வருகிறார். இதனிடையே பழைய இரும்பு கடையில் பழனிராஜ் தலைமையிலான குழுவினர் மிரட்டி மாமுல் வசூல் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. நேற்று முன்தினம் மாமுல் கேட்டு சென்றபோது வியாபாரம் இல்லை 2 நாட்கள் கழித்து மாமூல் தருவதாக பழைய இரும்பு கடை உரிமையாளர் மகேஸ்வரன் தெரிவித்ததாக கூறப்படுகிறது. 

இதனால் ஆத்திரம் அடைந்த பழனி ராஜ் தலைமையிலான சிலர் பழைய இரும்பு கடை உரிமையாளர் மகேஸ்வரனை, குடும்பத்தார் முன்னிலையில் கடுமையாக தாக்கியுள்ளனர். இவ்வாறு  தாக்கும் வீடியோ அருகாமையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த சிசிடிவி பதிவுகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த சிப்காட் போலீசார் திமுக பிரமுகர் பழனி ராஜ் உள்ளிட்ட மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.