சின்னாறு சோதனை சாவடியை காட்டு யானைகள் முகாமிட்டதால் வனத்துறையினரும், வாகன ஓட்டிகளும் அச்சம்

Dec 27, 2023, 10:19 AM IST

ஆனைமலை புலிகள் காப்பத்திற்குள் உடுமலை அமராவதி வனச்சரகம் உடுமலையில் இருந்து கேரளா மாநிலம் மூணாறு செல்வதற்கு 9/6 வழியாக மலை வழி பாதை செல்கிறது. கேரளா மாநில எல்லையில் உள்ள மறையூர், காந்தளூர் மற்றும் மலையடிவார கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்களின் அன்றாட தேவைகளுக்காக காய்கறி, பால், முட்டை மற்றும் கட்டுமான பொருட்கள், கறிக்கோழி உள்ளிட்டவற்றை வாங்க உடுமலை நகரத்திற்கு வந்து செல்கின்றனர்.

அண்மை காலமாக உடுமலை மூணாறு வழித்தடத்தில் ஏழுமலையான் கோவில் காமணத்து பள்ளம் உள்ளிட்ட பகுதியில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனிடையே வனப் பகுதியில் பனிப்பொழிவும் அதிகரிப்பதால் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக அமராவதி அணையை நோக்கி படையெடுத்து வருகின்றன. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக 5க்கும் மேற்பட்ட குட்டிகளுடன் 15 காட்டிய யானைகள் மலை வழி பாதையில் சாலையோரம் முகாமிட்டுள்ளன.

கூட்டமாக இருக்கும் காட்டு யானைகள் வாகன ஓட்டிகளுக்கு அவ்வபோது இடையூறு செய்யாமல் பாதையை விட்டு ஓரமாக இறங்கி வனப் பகுதிக்குள் சென்று விடுகின்றன. இந்நிலையில் ஒற்றை யானை ஒன்று சாலை ஓரமாக உலா வருகிறது. இந்த யானை கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தமிழக கேரளா எல்லையில் உள்ள சின்னாறு சோதனை சாவடியை முற்றுகையிட்டது.

சோதனை சாவடியை முற்றுகையிட்ட காட்டு யானையை கண்டு வனத்துறை ஊழியர்களும், வாகன ஓட்டிகளும் சற்றே பீதி அடைந்தனர். இருப்பினும் நல்வாய்ப்பாக யானை அங்கிருந்தவர்களுக்கு எந்தவித தொந்தரவும் அளிக்காமல் வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது.

காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரிப்பதால் வாகன ஓட்டிகள் உடுமலை இருந்து மூணார் செல்லும் போது மூணாறில் இருந்து  உடுமலை செல்லும் போதும் யானைகளை படம்பிடிப்பதும் நடுவடையில் வாகனங்களை நிறுத்தக்கூடாது என்றும் செல்பி என்ற பெயரில் யானைகளில் அருகே சென்று புகைப்படம் எடுப்பதும் யானைகளுக்கு எந்த வித தொந்தரவும் அளிக்கக்கூடாது என்று வனத்துறை எச்சரித்துள்ளனர்.