Mar 6, 2024, 5:19 PM IST
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கணபதி பாளையத்தில் அமைந்துள்ள தாந்தோணிமலைப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை தொடர்பான விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும், பள்ளியில் நடப்பாண்டு புதிதாக சேரும் மாணவ, மாணவிகளுக்கு புத்தகப்பை, சீருடை மற்றும் புத்தகங்களை வழங்கி, மாலை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.
முன்னதாக நிகழ்ச்சி நடைபெறும் அரை மணி நேரத்திற்கு முன்பாக மாவட்ட ஆட்சியரை வரவேற்பதற்காக பள்ளி முன்பு சாலையில் கடும் வெயிலில் பள்ளி மாணவ மாணவிகளான சிறுவர், சிறுமியர் நிற்கவைக்கப்பட்டனர். கடும் வெயிலில் மாணவர்கள் நிற்பதை செய்தியாளர்கள் புகைப்படம் எடுத்ததை பார்த்தவுடன் பள்ளியின் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு குடிநீர் பாட்டில்களை வழங்கினர். மாவட்ட ஆட்சியரை வரவேற்பதற்காக கோடைகாலத்தில் மாணவர்களை வெயிலில் நிற்க வைத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.