பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற ஆம்னி வேன் மீது மோதிய தனியார் பேருந்து.. ஈரோடு அருகே பரபரப்பு

Feb 23, 2024, 11:48 PM IST

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகேயுள்ள கரட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் தினேஷ்குமார். இவர் ஈரோட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களை பள்ளிக்கு அழைத்து செல்வதும், மாலை வீட்டில் இறக்கி விடுவதும் என மாத வாடகை கணக்கில் செயல்படும் ஆம்னி வேன் ஒன்றில், ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இன்று மாலை ,வழக்கம் போல் 16 மாணவர்களை ஏற்றிக்கொண்டு சத்தி சாலையில் சென்று கொண்டிருந்தார். 

அப்போது, சூளை பகுதியில், ஆம்னி வேனின் பின்னால் அதிவேகமாக வந்த தனியார் நகர பேருந்து ஒன்று, எதிர்பாராத விதமாக ஆம்னி வேனின் மீது மோதி விபத்திற்குள்ளானது. இதில், ஆம்னி வேனில் பயணித்த 4 மாணவர்களுக்கு லேசான காயமும், 4 மாணவர்களுக்கு பலத்த காயமும் ஏற்பட்ட நிலையில், மற்ற மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். இதனையடுத்து காயமடைந்த 8 மாணவர்களையும் மீட்ட அப்பகுதி மக்கள் , ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

இதனிடையே சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த வடக்கு காவல்நிலைய போலீசார், விபத்திற்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சம்பவம் தொடர்பான காட்சிகள் அப்பகுதியில் உள்ள ஒரு கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த நிலையில்,  அந்த காட்சிகள் வெளியாகி பொதுமக்கள் மத்தியில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.