22 நாட்களுக்கு பின் மீண்டும் தொடங்கப்பட்ட உதகை மலை ரயில்; சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

Dec 14, 2023, 12:58 PM IST

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு இயக்க பட்டு வரும் மலை ரயில் போக்குவரத்து நூற்றாண்டு பழமை வாய்ந்தது. கல்லார் முதல் குன்னூர் வரை அடர்ந்த வனப்பகுதிக்குள்  பயணிக்கும் வகையில் அமைக்கப்பட்ட மலை ரயில் பாதையில்  செல்லும் வழியில் மலை முகடுகள், நீர் வீழ்ச்சி, பாறை குகைகள், வானுயர்ந்த மரம் என மனதிற்கும், உடலுக்கும் புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் கொட்டி கிடக்கும் இயற்கை அழகினை கண்டு ரசிக்க பெரும்பாலும் இந்த மலை ரயிலில் பயணிக்க உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மாதக்கணக்கில் முன்பதிவு செய்து இந்த ரயிலில் பயணம் செய்ய காத்திருக்கும் பயணிகளுக்கு மழை காலங்களில் மிகவும் ஏமாற்றமே மிஞ்சுகிறது. தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை துவங்கியது முதலே நீலகிரி மாவட்டத்திலும் மலை ரயில் பாதை அமைந்துள்ள மேட்டுப்பாளையம், கல்லார், ஹில்கிரோ என பல்வேறு பகுதிகளில் மண்சரிவு ஏற்பட துவங்கியது.

அடுத்தடுத்து தொடர்ந்து மலை ரயில் பாதையில் மண்சரிவு ஏற்படுவது, பாறைகள் விழுவது என ரயில் தண்டவாளங்கள் சேதமடைந்து வந்த நிலையில் அதனை சீரமைக்கும் பணியும் நடைபெற்றது. இருப்பினும் அதிகப்படியான மழை காரணமாக மீண்டும் மீண்டும் மண்சரிவு ஏற்பட்டதால் நான்கு முறை ரயில் ரத்து செய்யப்பட்ட நிலையில் இறுதியாக மழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டிசம்பர் 13 ஆம் தேதி வரை ரத்து செய்யபட்டது.

இதனையடுத்து தற்போது சற்றே மழைப்பொழிவு குறைந்துள்ள நிலையில் இன்று 22 நாட்களுக்கு பிறகு மீண்டும் மலை ரயில் போக்குவரத்து துவங்கபட்டுள்ளது. இன்று காலை மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து 7.10 மணிக்கு முன்பதிவு செய்த நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளுடன் மலை ரயில் உதகை புறப்பட்டு சென்றது.

நீண்ட நாட்களாக முன்பதிவு செய்து காத்திருந்த சுற்றுலா பயணிகளுக்கு இன்று முதல் மீண்டும் மலை ரயில் சேவை துவங்க பட்டதால் மிகுந்த உற்சாகத்துடன் மலை ரயில் பயணித்தனர். மேலும் சிலர் ரயில் செல்வதற்கு  முன்பாக பாரம்பரியம் மிக்க மலை ரயில் முன்பு நின்று புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.