Nov 15, 2023, 11:25 AM IST
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளில் நேற்று முதல் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. குறிப்பாக வெங்கட்டா நகர், சத்யா நகர், கிருஷ்ணா நகர், பூமியான்பேட்டை உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி உள்ளது. இதனை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கிழக்கு கடற்கரை சாலை, கொக்கு பார்க், 45 சாலை பகுதிகளில் முதலமைச்சர் ரங்கசாமி ஆய்வு மேற்கொண்டார். மேலும் பொதுப்பணி துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், சட்டமன்ற உறுப்பினர் ஜான்குமார் ஆகியோருடன் தேங்கி உள்ள மழைநீரை வெளியேற்ற எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து நகராட்சி அதிகாரிகளிடம் மழைநீர் தேங்காமல் மோட்டார்களை கொண்டு மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார்.