Dec 25, 2023, 11:00 AM IST
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கிறித்துவர்கள் ஆண்டுதோறும் தங்கள் இல்லங்களில் குடில் அமைத்து வழிபடுவதை வழக்கமாக கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த ஆண்டிற்கான கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த ஓவிய ஆசிரியரான சுந்தரராசு தனது வீட்டில் வித்தியாசமான முறையில் டிஜிட்டல் பணபரிவர்த்தனையை வரவேற்கும் வகையில் நகல் ரூபாய் நோட்டுகளை கொண்டு கிறிஸ்துமஸ் குடில் அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.
மேலும் கடந்த ஆண்டு டிஜிட்டல் இந்தியாவை வரவேற்கும் வகையிலும், மின்னணு பயன்பாட்டில் கவனமுடன் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கம்யூட்டர் மற்றும் பழுதடைந்த மின்னணு கழிவு பொருட்களை கொண்டு கிறிஸ்துமஸ் குடிலை அமைத்திருந்தார். தொடர்ந்து 11-வது வருடமாக இந்த ஆண்டு கிருஸ்துமஸ் பண்டிகைக்காக தனது வீட்டில் வித்தியாசமான முறையில், பணபரிவர்த்தனையை போற்றும் வகையில் 7 லட்சம் நகல் ரூபாய் நோட்டுகளை கொண்டு, கிறிஸ்துமஸ் குடிலை அமைத்துள்ளார்.
கிறிஸ்துமஸ் குடில்களையும், பல்வேறு வகையான டிஜிட்டல் பணபரிவர்த்தனை செய்யும் நிறுவனங்களை குடிலுக்குள் பொறுத்தியுள்ளார். மேலும் டிஜிட்டல் மோசடி நடந்தால் புதுச்சேரி சைபர் க்ரைமுக்கு தெரிவிக்க புகார் எண் 1930 மற்றும் மின் அஞ்சல் முகவரியை எழுதியுள்ளார். இந்த குடிலை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து ரசித்து வருகின்றனர். இதற்கு முன்பாக 1000 பிளாஸ்டிக் பாட்டில்கள், தேங்காய் மற்றும் தென்னை, புத்தகங்கள், கொரோனா தடுப்பு பொருட்கள் கொண்டு வடிவமைத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.