அமைச்சர் பதவி ராஜினாமா: செந்தில் பாலாஜிக்கு நாளை ஜாமீன் கிடைக்குமா? பின்னணி என்ன?

By Manikanda PrabuFirst Published Feb 13, 2024, 2:49 PM IST
Highlights

அமைச்சர் பதவியை  செந்தில் பாலாஜி ராஜினாமா செய்துள்ளதால் நாளைய விசாரணையின்போது, அவருக்கு ஜாமீன் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது

சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி கைது செய்தனர். அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க சென்னை முதன்மை அமர்வு உத்தரவிட்டது. அதன்படி, அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இருமுறை தள்ளுபடி செய்துவிட்டது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில் உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் தர மறுத்து விட்டது. இருப்பினும், மருத்து ஜாமீன் கோராமல் சாதாரண ஜாமீன் கோரி விசாரணை நீதிமன்றத்தை அணுகுமாறும், அங்கு ஜாமீன் மறுக்கப்பட்டால் உயர் நீதிமன்றத்தை அணுகுமாறும் செந்தில் பாலாஜி தரப்புக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி 3ஆவது முறையாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

Latest Videos

அந்த மனுவை விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் தர மறுப்பு  தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனை எதிர்த்து அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மேல்முறையீடு செய்துள்ளார். அந்த வழக்கானது நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரிக்கப்பட்டு வருகிறது.

PM Surya Ghar Muft Bijli Yojana வீடுகளுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம்: பிரதமர் மோடி அறிவிப்பு!

இந்த வழக்கானது கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, உடல்நலக் காரணங்களுக்காக மட்டுமே தாக்கல் செய்யப்பட்ட செந்தில் பாலாஜியின் முந்தைய ஜாமீன் மனுவை, உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தள்ளுபடி செய்தார். அப்போது, செந்தில் பாலாஜி அமைச்சரவையில் நீடிப்பதைக் கருத்தில் கொண்டு அந்த மனுவை அவர் தள்ளுபடி செய்ததாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் சுட்டிக்காட்டினார். அதேநிலைதான் தற்போதும் தொடர்வாக நீதிபதி கூறினார்.

மேலும், “செந்தில் பாலாஜி கைதாகி 230 நாட்கள் ஆகியும் அமைச்சராக தொடர்வது ஏன்? அமைச்சர் பதவியில் நீடிப்பதன் மூலம் என்ன கருத்தை சமூகத்திற்கு சொல்கிறீர்கள்? கடைநிலை ஊழியர் 48 மணிநேர சிறையில் இருந்தால் சஸ்பெண்ட் செய்யப்படுகிறாரே, சட்டம் அனைவருக்கும் சமம் தானே? ஒரு நீதிபதி கிரிமினல் வழக்கில் சிக்கினால், நீதிபதியாக இருக்க அனுமதிக்கலாமா?” என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் சரமாரியான கேள்விகளை எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆர்யமா சுந்தரம், “அமலாக்கத்துறையின் விசாரணையை கணிசமாக முடித்து, அதற்குத் தேவையான அனைத்து ஆவணங்களையும் சேகரித்துவிட்டதால், மனுதாரர் இப்போது ஜாமீன் கோருகிறார். மனுதாரர் அமைச்சரவையில் தொடரும் வாதத்தை இந்த நிலையிலும் அவருக்கு எதிராக முன்வைத்தால், உயர்ந்த இடத்தில் இருப்பவர்கள் ஜாமீன் பெறுவது கடினமாகி விடும். மனிதனாக ஜாமீன் கோருவதற்கு செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவி தடையாக இருக்கக்கூடாது.” என்றார்.

இந்திய வம்சாவளியினருக்குப் பிரதமர் மோடி பாராட்டு!

நீதிபதி ஒருவர் கிரிமினல் வழக்கில் சிக்கினால், அவரை நீதிபதியாக இருக்க அனுமதிக்கலாமா? என்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கேள்விக்கு பதிலளித்த வழக்கறிஞர் ஆர்யமா சுந்தரம், “உச்ச நீதிமன்றத்தில் ஒரு நீதிபதி ஒருமுறை இதே போன்ற காரணங்களுக்காக எந்த இலாக்காவும் ஒதுக்கப்படாமல் இருந்தார். ஆனால் அவர் தொடர்ந்து நீதிபதியாக இருந்தார். நீதிமன்றத்தில் அமர்ந்திருந்தார். இருப்பினும், யாருக்காவது ஏதாவது பிரச்சனை என்றால் அந்த நீதிபதி முன் ஆஜராகத் தேவையில்லை என்று எல்லோரிடமும் சொல்லப்பட்டது. அதாவது எந்த வழக்குகளும் அவர் முன்பு பட்டியலிடப்படவில்லை.” என்றார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான விசாரணையை பிப்ரவரி 14ஆம் தேதிக்கு (நாளை) தள்ளி வைத்தார். இந்த பின்னணியில், செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். கடந்த முறை விசாரணையின்போது, அமைச்சர் பதவி சுட்டிக்காட்டப்பட்டது. தற்போது அமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளதால், நாளைய விசாரணையின்போது, அவருக்கு ஜாமீன் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

click me!