பாமக நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. பேரன் முகுந்தனை அரசியலில் அறிமுகப்படுத்தியதும், அன்புமணி ஏற்றுக்கொள்ளாத நிலையில் தற்போது சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
பாமகவும் அரசியல் கூட்டணியும்
1989 ஆம் ஆண்டு மருத்துவர் ராமதாஸ் ஆரம்பித்த பாமக, கடந்த 35 ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பெற்றிருக்கிறது. குறிப்பாக வட மாவட்டங்களில் கணிசமான வாக்கு வங்கியை கொண்டுள்ளது. அந்த வகையில் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக பாமக அந்த பகுதியில் உள்ளது. ஒவ்வொரு தேர்தலிலும் அதிமுக- திமுக- பாஜக என கூட்டணியை மாற்றி மாற்றி தேர்தலை எதிர்கொண்டு வருகிறது. இதனால் தொண்டர்கள் மத்தியிலும் கடும் அதிருப்தி உருவாகியுள்ளது. இந்தநிலையில் தான் தந்தை - மகனுக்கு இடையே உள்ள மோதல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
undefined
அரசியலில் ராமதாஸ் வாரிசுகள்
பாமக ஆரம்பிக்கப்பட்டபோது தனது குடும்பத்தில் இருந்து ஒருவர் கூட கட்சி பொறுப்பு மற்றும் அரசு பொறுப்புகளுக்கு வரமாட்டார்கள். எந்த தேர்தலிலும் நிற்க மாட்டார்கள் என்றும், அதேபோன்று தானும் தேர்தலில் நிற்க மாட்டேன் என்றும் உறுதியாக கூறி சத்தியம் செய்தவர்தான் மருத்துவர் ராமதாஸ். ஆனால் அடுத்த சில ஆண்டுகளிலேயே தனது மகன் அன்புமணியை அரசியலுக்கு கொண்டு வந்தவர், மாநிலங்களவை பொறுப்பு வாங்கிக்கொடுத்து மட்டுமில்லாமல் மத்திய அமைச்சர் பதவியையும் வாங்கி கொடுத்தார். அடுத்ததாக 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தனது மருமகளையும் அரசியல் களத்தில் இறங்கினார்.
இதனால் வாரிசு அரசியல் தொடர்பாக பாமக பேச முடியாத நிலை உருவானது. இந்த சூழ்நிலையில் தான் நேற்று புதுச்சேரியில் நடைபெற்ற பாமக பொதுக்குழு கூட்டத்தில் தனது மகள் காந்திமதியின் மகனும் , தனது பேரணுமான முகுந்தனை நியமனம் செய்வதாக அறிவித்தார். இதனால் அதிருப்தி அடைந்த அன்புமணி, மேடையிலேயே வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது ராமதாஸ் எனது பேச்சை கேட்காதவர்கள் கட்சியில் இருக்க வேண்டாம். விலகி செல்லலாம் என கூறினார். இதனால் திரைமறைவில் நடைபெற்று வந்த மோதல் வெளிச்சத்திற்கு வந்தது.
தொடர் தோல்வியை சந்திக்கும் பாமக
மேலும் கடந்த சில ஆண்டுகளாகவே அன்புமணியின் செயல்பாட்டிற்கு ராமதாஸ் அதிருப்தி தெரிவித்து வந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது அதிமுக கூட்டணியில் பாமக இடம் பெற வேண்டும் என்பது ராமதாஸின் விருப்பமாக இருந்தது. மாறாக பாஜக அணியில் தொடர வேண்டும் என்பது அன்புமணியின் முடிவாக இருந்தது. எனினும் கடைசியில் அன்புமணி விருப்பம் நிறைவேறியது. 10 தொகுதிகளில் போட்டியிட்டு டெபாசிட் இழந்தது மட்டுமில்லாமல் அனைத்து தொகுதிகளிலும் பாமக தோல்வியை தழுவியது. எனவே அனுபவ சாலியான ராமதாஸின் அறிவுரைகளை அன்புமணி கேட்பதில்லை என்று சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் சென்னை தியாகநகரில் இயங்கி வரும் பாமக அலுவலகத்தில் தொண்டர்களை சந்தித்து வந்த அன்புமணி திடீரென பனையூரில் தனது அலுவலகம் செயல்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். எனவே புத்தாண்டு தினத்தில் அன்புமணி, அந்த அலுவலகத்தில் நிர்வாகிகளையும், தொண்டர்களையும் சந்திப்பார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கிடையே அன்புமணியை சமாதானப்படுத்தும் வேலையில் கட்சியின் முன்னாள் தலைவர் ஜிகே மணி உள்ளிட்ட நிர்வாகிகள் இறங்கியுள்ளனர். நேற்று இரவு சுமார் 2 மணி நேரம் அன்புமணியை சந்தித்து ஜி.கே.மணி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஆனால் இதில் அன்புமணி விடாப்பிடியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாமகவில் அடுத்து என்ன.?
தனக்கு போட்டியாக முகுந்தன் வளர்க்கப்படலாம் என்றும், அன்புமணி ஆதரவாளர்கள் வட்டாரத்தில் பல்வேறு கருத்துக்கள் உலா வருகின்றன. இதனிடையே பாமக பொதுக்குழுவில் நடைபெற்றது நாடகம் என ஒரு தரப்பினர் தெரிவித்து வருகின்றனர். வாரிசு அரசியலை எதிர்க்கும் தலைவராக அன்புமணி உள்ளார் என்பதை காட்டுவதற்காவே இந்த சண்டை தொடர்பான நாடகம் செயல்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. எதுவாக இருந்தாலும் அன்புமணி மற்றும் ராமதாஸ் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக இன்றோ அல்லது நாளையோ நல்ல முடிவு எட்டப்படும் என பாமக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.