அதிமுக அலுவலகம் முன்பு உதயநிதி ஸ்டாலின்…. வெளியான வைரல் போட்டோ… உ.பி.க்கள் பரபரப்பு

By manimegalai aFirst Published Nov 8, 2021, 8:56 AM IST
Highlights

சென்னையில் அதிமுக தலைமை அலுவலகம் முன்பாக மழை பாதிப்புகளை உதயநிதி ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார்.

சென்னை: சென்னையில் அதிமுக தலைமை அலுவலகம் முன்பாக மழை பாதிப்புகளை உதயநிதி ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார்.

தமிழகத்தில் கடந்த 1 வாரத்துக்கும் மேலாக பலத்த மழை கொட்டி வருகிறது. சென்னையில் அவ்வப்போது எட்டி பார்த்த மழை கடந்த 2 நாட்களாக விடாமல் பெய்து வருகிறது.

சென்னையில் மட்டும் ஒரே வாரத்தில் 40 சதவீதத்துக்கும் அதிகமான மழை பதிவாகி மக்களை பெரும் பாதிப்புக்கு ஆளாக்கி இருக்கிறது.  கிட்டத்தட்ட 480.1 மிமீ மழை பதிவாகி மக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.

தலைநகர் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அதிகனமழையால் எங்கும் தண்ணீராக காட்சி அளிக்கிறது. சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும்  முக்கிய ஏரிகள் நிரம்பி உபரி நீரும் திறந்துவிடப்பட்டது.

தாழ்வான பகுதிகளில் மழை கொட்டி தீர்த்ததால் பல்வேறு இடங்களில் வீடுகளுக்கும் தண்ணீர் புகுந்தது. வீதிகள், வீடுகள் என மழைநீர் தாண்டவமாட பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய வசதிகள் செய்து கொடுக்கும் நடவடிக்கைகள் வேகம் எடுத்துள்ளன.

மழைநீருடன் கழிவு நீரும் சேர்ந்து வெளியேறியதால் துர்நாற்றமும் மக்களை முகம் சுழிக்க வைத்தது. மழைநீர் காரணமாக சைதை துரைசாமி சுரங்கபாதை, மேட்லி சுரங்க பாதை உள்ளிட்ட 6 சுரங்க பாதைகள் தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளன.

சாலைகளில் தேங்கிய மழைநீரால் இரு சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் ஆங்காங்கே பழுதாகி நிற்க மக்கள் தவித்து போயினர். சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளதால் நேரடியாக முதலமைச்சர் ஸ்டாலின் மக்களை சந்தித்து நிலைமைகளை கண்டறிந்து துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

நிவாரண உதவிகளையும் மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் வழங்கினார். அடுத்து எடுக்கப்பட வேண்டிய முக்கிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் அவர் ஆலோசனையும் நடத்தினார்.

இதையடுத்து ஆங்காங்கே மழை காரணமாக சேதம் அடைந்த பகுதிகளை சீரமைக்கும் பணிகளும் முடுக்கிவிடப்பட்டன. மழை வெளுத்து வாங்கும் பகுதிகளில் அமைச்சர்களும் களம் இறங்கி நிவாரண உதவிகளை செய்தனர்.

இந் நிலையில் சென்னையில் திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். சென்னை ராயப்பேட்டையில் அதிமுக தலைமை அலுவலகம் எதிரே அமைந்துள்ள சாலையில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்புகளை அவர் பார்வையிட்டார்.

அதிமுக அலுவலகம் முன்பு தேங்கி இருக்கும் மழைநீரை அகற்றுவது குறித்தும், அவர் நடந்து சென்ற போட்டோக்களும் இணையத்தில் வெளியாகி உள்ளன. ஆய்வு மேற்கொண்ட போட்டோக்களை அவர் தமது டுவிட்டர் பக்கத்திலும் வெளியிட்டு உள்ளார்.

ராயப்பேட்டை 119வது வட்டம் அவ்வை சண்முகம் சாலையில் மழைநீர் தேங்கி உள்ள பகுதிகளை பார்வையிட்டதாகவும், தேங்கி நிற்கும் மழை நீரை அகற்றும் பணிகளை விரைவில் மேற்கொண்டு, மக்களின் அவசர தேவைகளுக்கு உதவிட தயார் நிலையில் இருக்குமாறு அதிகாரிகளையும், கட்சியினரையும் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் அவர் தமது டுவிட்டர் பதிவில் கூறி உள்ளார்.

இதனை கண்ட உடன்பிறப்புகள் அவற்றை பார்த்து பாராட்டியதோடு, மற்ற தளங்களுக்கு படு ஸ்பீடாக பகிர்ந்தும் வருகின்றனர்.

 

தொகுதி ராயப்பேட்டை 119வது வட்டம் அவ்வை சண்முகம் சாலையில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளை பார்வையிட்டோம். தேங்கி நிற்கும் மழை நீரை அகற்றும் பணியை விரைவில் மேற்கொண்டு, மக்களின் அவசர தேவைகளுக்கு உதவிட தயார் நிலையில் இருக்குமாறு அதிகாரிகள்-கழகத்தினரை கேட்டுக்கொண்டேன். pic.twitter.com/GV7Hca3K8m

— Udhay (@Udhaystalin)
click me!