இன்று தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை … 12 % கூடுதல் மழை… சென்னை, கடலூரில் விடிய விடிய கொட்டித் தீர்த்த மழை!!

By Selvanayagam PFirst Published Nov 1, 2018, 7:08 AM IST
Highlights

வட கிழக்கு பருவமழை இன்று தொடங்கவுள்ள நிலையில் சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் பல இடங்களில் விடிய விடிய மழை கொட்டித் தீர்த்தது. இதே போல் கடலூரிலும் கனமழை பெய்தது.

தென் மேற்கு பருவமழை கடந்த மாதம் 21 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து உடனடியாக வட கிழக்கு பருவமழை தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அரபிக் கடலில்  உருவான புயல் சின்னம் மற்றும் காற்றில் திசை மாற்றத்தால் பருவமழை தள்ளிப் போனது.

இந்நிலையில் இன்று முதல் வட கிழக்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி சென்னையில் பல இடங்களில் நேற்று நள்ளிரவு தொடங்கிய மழை விடிய, விடிய கனமழை கொட்டித் தீர்த்தது.

தாம்பரம், தி.நகர், வடபழனி, கோடம்பாக்கம், எழும்பூர், நுங்கம்பாக்கம், திருவல்லிக்கேணி, சூளைமேடு, ராயப்பேட்டை, போரூர் உள்பட பல்வேறு பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது.. இந்த மழையால் சாலையில் மழைநீர் தேங்கி வருகிறது.

இதே போல் கடலூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

இதனிடையே சென்னை வானிலை மையம் வெளியிட்டு அறிக்கையில் வட கிழக்கு பருவமழை இன்று கடலோர மாவட்டங்களில் தொடங்கும் என்றும்  பின்னர் படிப்படியாக மாநிலம் முழுவதும் கொட்டித் தீர்க்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் முதல் கட்டமாகத்தான் சென்னை, கடலூரில் மழை தொடங்கியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் இந்த ஆண்டு வழக்கத்தை விட 12 சதவீதம் மழை கூடுதலாக பெய்யும் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்படுள்ளது.

click me!