தமிழகத்தை புரட்டிப்போட்ட மழை… சீரமைக்க ரூ.4626.80 கோடி கேட்கும் தமிழக அரசு!!

By Narendran SFirst Published Nov 24, 2021, 7:06 PM IST
Highlights

மழை மற்றும் வெள்ளம் பாதிப்புகளை சீரமைக்க ரூ.4626.80 கோடி கேட்டு தமிழக அரசு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது. 

மழை மற்றும் வெள்ளம் பாதிப்புகளை சீரமைக்க ரூ.4626.80 கோடி கேட்டு தமிழக அரசு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து பெரும்பாலான இடங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதன் காரணமாக நீர் நிலைகள் நிரம்பி வெள்ளம் ஏற்பட்டது. பல பகுதிகளில் தரைப்பாலங்கள் நீரில் மூழ்கின. மேலும் தாழ்வான பகுதிகளில் இருந்த வீடுகளுக்கு தண்ணீர் புகுந்ததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். குறிப்பாக சென்னையில் பெய்த கனமழை காரணமாக வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து பொருட்கள் அனைத்தை சேதப்படுத்தியோடு மக்களின் இயல்பு வாழ்க்கையை இழக்கச்செய்தது. இதேபோல் டெல்டா மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக பல ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்துள்ளனர். மேலும் இந்த மழை காரணமாக சாலைகள் அனைத்தும் சேதமடைந்துள்ளன. குறிப்பாக கன்னியாகுமரியில் பெய்த கனமழையால் ஏரி, குளங்கள் நிரம்பி, குளங்கள் உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்து பெருத்த சேதத்தை ஏற்படுத்தியது.

வீடுகளுக்கு வெள்ள நீர் புகுந்ததால் மக்கள் பலர் தங்களது வீடுகளையும் பொருட்களையும் இழந்துள்ளனர். இந்த நிலையில் மழை மற்றும் வெள்ளம் பாதிப்புகளை சீரமைக்க ரூ.4626.80 கோடி கேட்டு தமிழக அரசு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அதில்,  தற்காலிக சீரமைப்புக்கு ரூ. 1070.92 கோடியும், நிரந்தர சீரமைப்பு பணிக்கு ரூ.3554.88 கோடியும் தேவை என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அக்டோபர் மற்றும் நவம்பர் 2021 மாதங்களில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பெய்த கன மழையினால் தமிழ்நாட்டில் ஏற்பட்ட மழை வெள்ள சேதங்களை தற்காலிகமாக சீரமைக்க முதற்கட்ட மதிப்பீடாக ரூ.549.63 கோடியும், நிரந்தரமாக சீரமைக்க ரூ.2079.86 கோடியும், ஆக மொத்தம் ரூ.2829.29 கோடி தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யக் கோரி மத்திய அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

மத்திய அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் கணக்கெடுக்கப்பட்டுள்ள கூடுதலான சேத விவரங்களின்படி தற்காத சீரமைப்பு பணிகளுக்கு ரூ.521.28 கோடியும், நிரந்தரமாக சீரணமக்க ரூ.1475.22 கோடியும் ஆக மொத்தம் ரூ.1996.50 கோடி தேவைப்படும் என கணக்கிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே மத்திய அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்ட முதற்கட்ட அறிக்கையில் கோரப்பட்டுள்ள தொகை மற்றும்  அதனை தொடர்ந்து ஏற்பட்டுள்ள சேதங்கள் மதிப்பீடு செய்யப்பட்டு தற்காலிக சீரமைப்பு பணிகளுக்காக ரூ.1070.92 கோடியும், நிரந்தாமாக சீரமைக்க ரூ.3554.88 கோடியும் ஆக மொத்தம் ரூ.4625.80 கோடி கூடுதலாக வழங்க ஒன்றிய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!