இருசக்கர வாகன விபத்தில் சிக்கி காவலர் ஒருவர் பலத்த காயம் அடைந்த நிலையில், மருத்துவமனையில் மூளை சாவு அடைந்தார். இதனையடுத்து அவரது உறவினர்கள் காவலரின் கண்களை தானம் செய்தனர்.
விபத்தில் காவலர் மரணம்
நாம் இறந்த பிறகும் நமது உடல் உறுப்புகள் மற்றவர்களுக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும் என அரசாங்கம் சார்பாக தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போதைய நிலையில் ஏராளமானோர் தங்களது உடல் உறுப்புகளை தானம் செய்து வருகின்றனர். இறந்த பிறகு மண்ணோடு மண்ணாக மக்காமல் உலகை பார்ப்பதற்கு பார்வையில்லாதவர்களுக்கு கண்களை தானம் செய்து வருகின்றனர். அப்படிப்பட்ட ஒரு நிகழ்வு தான் திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை, இவர் வாணியம்பாடி கிராமிய காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றி வரும் நிலையில் இவருக்கு திருமணமாகி 1 வயதில் குழந்தை உள்ளது.
கண்களை தானம் செய்த உறவினர்கள்
இந்நிலையில் நேற்று (28.04.2024) இரவு அண்ணாமலை தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் நாட்றம்பள்ளி நோக்கிச்சென்று கொண்டிருந்த போது, கல்லாறு என்ற பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம், சாலையோர தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற காவலர் அண்ணமாலை மற்றும் அவரது நண்பர் படுகாயமடைந்து இருவரும் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், அண்ணமாலை (29.04.2024) மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனை தொடர்ந்து காவலர் அண்ணாமலையின் கண்களை அவரது குடும்பத்தினர் தானமாக வழங்கினர்.