அரசு பள்ளி மாணவர்கள் கட்டணமில்லாமல் நூலகத்தில் உறுப்பினராகலாம்... அடுத்த ஆண்டு அறிமுகம்!

First Published Oct 17, 2017, 5:34 PM IST
Highlights
TN govt plans to introduce next year school students can become a member of the library without charge


அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் மாணவர்கள்   பொது நூலகங்களில் கட்டணமில்லாமல் உறுப்பினராகி, புத்தகங்கள் எடுத்தும் படிக்கும் திட்டத்தை தமிழக அரசு கொண்டு வர உள்ளது.

 பொது நூலகங்களையும், அரசு பள்ளிகளையும் இணைக்கும் பணிகள் வேகமாக நடந்து வருவதால், அடுத்த ஆண்டு இந்த திட்டம் நடைமுறைக்கு வரும் எனத் தெரிகிறது.

இந்த திட்டத்தை செயல்படுத்த கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே நூலகத்துறை தீவிரம் காட்டியபோதிலும், நிர்வாகரீதியான ஒத்துழைப்பு இல்லாததால் தாமதமாகி வந்தது. இதன் காரணமாக பள்ளியில் செயல்படும் நூலகத்தில் மட்டுமே மாணவர்கள் புத்தகங்களை எடுத்து படித்து வந்தனர்.

ஆனால், நூலகங்கள், பள்ளிகள் இணைப்புத் திட்டம் விரைவாக நடந்துவருவதன் மூலம், மாணவர்கள் கட்டணம் ெசலுத்தாமல் மாவட்ட நூலகத்தில் உறுப்பினராகி, தேவையான புத்தகங்களை இனி எடுக்கலாம்.

இது குறித்து நூலகத்துறை இயக்குநரும், ராஷ்ட்ரிய மத்யமிக் ஷிக்சா அபியான் திட்டத்தின் இயக்குநர் எஸ். கண்ணப்பன் கூறியதாவது-

 நூலகத்துடன் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளை இணைக்கும் திட்டம் ஏற்கனவே விழுப்புரம், திருவண்ணாமலை, கோவை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய நகரங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை பொது நூலகத்தில் கடந்த வாரம் 2500 மாணவர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது. இதை 32 மாவட்டங்களுக்கு விரைவுப்படுத்தும் பணி தீவிரமாகியுள்ளது.

 நூலகத்தின் கட்டமைப்பு மிகவும் பலவீனமாக இருப்பதால், கிராமங்களில் உள்ள பள்ளிகளுக்கு இந்த திட்டம் நிச்சயம் உதவும். மேலும், பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மாணவர்களின் பட்டியலை அருகில் உள்ள நூலகத்துக்கு அனுப்பி உறுப்பினர் அட்டை வழங்க கோரிக்கை விடுக்கின்றனர். இதன்படி, ஒவ்வொரு நூலகமும் குறைந்தபட்சம் 3 முதல் 4 அரசு  பள்ளி மாணவர்களுக்கு உறுப்பினர்கள் அட்டை வழங்கி, புத்தகங்களை வழங்கப்படும்.

இந்த திட்டம் மூலம் மாநிலத்தில் உள்ள 4 ஆயிரம் நூலகங்களில் குறைந்தபட்சம்  2 ஆயிரம் நூலகங்களில் பள்ளிகள் இணைக்கப்படும்.  மேலும், நடமாடும் நூலகங்கள் மூலமும் மாணவர்கள் புத்தகங்கள் எடுத்து படிக்கலாம். இதன் மூலம், பள்ளி, கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் போட்டித் தேர்வுகளுக்கும், வேலைவாய்ப்பு தேர்வுகளுக்கும் தயாராக உதவியாக இருக்கும்’’ என்றார்.

click me!