புதிய பட்டத்துக்காரராகத் தேர்வாகி இருக்கும் சிறுவன் எல்லா குழந்தைகளையும் போல வழக்கம்போல குடும்பத்துடன் வாழலாம். பள்ளிக்குச் சென்று படிக்கலாம். ஆனால் எந்த ஒரு துஷ்டி வீட்டிலும் பங்கெடுக்கக் கூடாது.
தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள கிராமத்தில் மாட்டுத் தொழுவ பட்டத்துக்காரராகத் தேர்வு செய்யப்பட்ட 7 வயது சிறுவனுக்கு ஊர் மக்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
தேனி மாவட்டம் கம்பம் அருகிலே உள்ள நாட்டுக்கல் பகுதியில் அருள்மிகு நந்தகோபாலன் தம்புரான் மாட்டுத் தொழுவம் உள்ளது. இங்கு சுமார் 600 நாட்டு மாடுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்த மாடுகளில் ஒன்றை பட்டத்துக்காளையாகத் தேர்வு செய்து, அதை தெய்வமாக வழிபடுவது வழக்கம்.
ஒவ்வொரு சனி, அமாவாசை, தைப்பொங்கல், ரோகிணி நட்சத்திரம் வரும் நாள்களில் மாடுகளுக்கு சிறப்பு வழிபாடு நடைபெறும். அப்போது வாழைப்பழம், அகத்திக்கீரை போன்றவற்றை மாடுகளுக்கு வழங்குவார்கள். மாட்டுத் தொழுவத்தில் பூஜை மற்றும் நிர்வாகத்துக்காக கோடியப்பகவுடர், பூசாரியப்பனார், பெரியமனைக்காரர், பட்டத்துக்காரர் ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் நான்கு பேருக்கும் ஊர்மக்கள் 'கடவுளின் பிள்ளைகள்' என்று மரியாதை கொடுக்கிறார்கள்.
இவர்கள் தாய், தந்தை, பிள்ளைகள் என ரத்த உறவுகளே இறந்தாலும் அந்த துக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்ளக் கூடாது. இறந்தவர்களின் உடலைக்கூடப் பார்க்கக் கூடாது. தொழுவத்தில் உள்ள பட்டத்துக்காளை இறந்தால் மட்டும் இறுதி மரியாதை செலுத்துவார்கள்.
இந்நிலையில் இதுவரை பட்டத்துக்காரராக இருந்தவர் அண்மையில் உயிரிழந்ததை அடுத்து புதிய பட்டத்துக்காரரைத் தேர்வு செய்யும் நிகழ்ச்சி நந்தகோபாலன் தம்புரான் மாட்டுத் தொழுவ வளாகத்தில் நடைபெற்றது. ஒக்கலிக கவுடர் வகையறாவைச் சேர்ந்த பலரும் விரதம் இருந்து இந்தத் தேர்வில் கலந்துகொண்டனர்.
அப்போது கோடியப்பகவுடருக்கு மாலை அணிவித்து தீபம் ஏற்றி அருள் ஏற்றப்பட்டது. உருமி அடித்து உச்சநிலையில் அவர், ஆனந்தகுமாரின் 7 வயது மகன் ஆதவனுக்கு மாலை போட்டார். அந்தச் சிறுவன் புதிய பட்டத்துக்காரராக தேர்வு செய்யப்பட்டார். ஊர்மக்கள் ஆதவனுக்கு புத்தாடை வழங்கி, மாலை அணிவித்து சிறப்பு மரியாதை செய்தனர்.
“புதிய பட்டத்துக்காரராகத் தேர்வாகி இருக்கும் சிறுவன் எல்லா குழந்தைகளையும் போல வழக்கம்போல குடும்பத்துடன் வாழலாம். பள்ளிக்குச் சென்று படிக்கலாம். ஆனால் எந்த ஒரு துஷ்டி வீட்டிலும் பங்கெடுக்கக் கூடாது. நந்தகோபாலன் தம்புரான் மாட்டுத் தொழுவத்தில் நடக்கும் வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டும்” என்று மாட்டுத் தொழுவ நிர்வாகிகள் கூறுகின்றனர்.