மீண்டும் வெடித்த மதமாற்ற சர்ச்சை.. விசாரணையில் வெளியான முக்கிய தகவல் .. அரசு விடுத்த எச்சரிக்கை..

By Thanalakshmi VFirst Published Apr 26, 2022, 9:06 PM IST
Highlights

திருப்பூர் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவியை, ஆசிரியை மதமாற்றம் செய்ய முயன்றதாக  அளிக்கப்பட்ட புகாரில் உண்மைத் தன்மை இல்லை என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
 

திருப்பூர் ஜெய்வாய்பாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை, அப்பள்ளி ஆசிரியர் மதமாற்றம் செய்ய முயற்சித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அந்த மாணவி பள்ளிக்கு செல்லும்போது தினமும் நெற்றியில் திருநீறும், கழுத்தில் ருத்ராட்சமும் அணிந்து செல்வது வழக்கம் என கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பந்தப்பட்ட பள்ளியின் தமிழ் ஆசிரியை திலகவதி, மாணவியை மதமாற்றம் செய்ய முயற்சித்ததாக கூறி, மாணவியின் பெற்றோர் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.

இதனை தொடர்ந்து புகார் குறித்து விசாரணையில் இறங்கிய மாவட்ட கல்வித் துறை அதிகாரிகள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவிகளிடம் 2 நாட்கள் விசாரணை நடத்தினர். மேலும் இதுதொடர்பான விசாரணை அறிக்கையை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ், மாவட்ட ஆட்சியர் வினீத்திடம் அளித்தார்.இது தொடர்பாக இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசும் போது மாநகராட்சி பள்ளி மதமாற்றம் பிரச்சனை தொடர்பாக முதன்மைக் கல்வி அலுவலர் ரமேஷ் தலைமையில் குழு அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டதில் மாணவி தரப்பில் தெரிவிக்கப்பட்ட புகாரில் உண்மைத் தன்மை இல்லை என்பது தெரியவந்தது. எனவே இதுக்குறித்து சமூக வலைதளங்களில் பொய்யான தகவல்களை பரப்புகிறவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மதமாற்ற முயற்சிகள் நடக்கவில்லை. ஏதேனும் பள்ளிகளில் இதுபோன்ற புகார்கள் இருந்தால் மாணவ, மாணவிகள் 1098 என்ற எண்ணுக்கு புகார் அனுப்பலாம்.இது தொடர்பாக போலீஸாருக்கும் நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்துள்ளோம் என்று ஆட்சியர் கூறினார்.சில மாதங்களுக்கு முன்னர் தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் கிறிஸ்தவ நிர்வாக பள்ளியில் படித்து வந்த மாணவி லாவண்யா தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் பள்ளி ஆசிரியர்கள் மாணவியை மதமாற்றம் செய்ய கட்டாயப்படுத்தியதால்தான் மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக பாஜக உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகள் குற்றம் சாட்டின. பின்னர் காவல் துறை விசாரணையில் அது உண்மையில்லை என தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.

இதே போன்று கடந்த சில வாரங்களுக்கு முன்பு, நாகர்கோவிலை அடுத்த இரணியல் கண்ணாட்டுவிலையில் உள்ள அரசு பள்ளிகள் தையல் பயிற்சி ஆசிரியர்  மாணவிகளை மதமாற்றம் செய்ய முயற்சித்தார் என புகார் எழுந்துள்ளது.  தன்னிடம் பயிலும் மாணவிகள் சிலரிடம் கிருத்துவ மதத்தை புகுத்தும் வகையில் அவர் நடந்து கொண்டதாகவும், பைபிள் தான் நல்ல நூல் என்றும், இந்துத்துவவாதிகள் சாத்தான்கள் என்று அவர் பேசியதாகவும் அவர் மீது புகார் எழுந்தது. பின்னார் விசாரணை அடிப்படையில் அந்த ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டார். 

click me!