தொழிலதிபரை தனிமையில் அழைத்து பணத்தை கறக்க நினைத்த கும்பல்; 30 நிமிடத்தில் சுத்து போட்ட நெல்லை போலீஸ்

By Velmurugan sFirst Published May 2, 2024, 5:43 PM IST
Highlights

சமூக வலைதளம் மூலம் பழகி தொழிலதிபரை தனிமையில் அழைத்து அவரிடம் பணம் பறிக்க முயன்ற பெண் உள்பட 5 நபர்களை திருநெல்வேலி காவல் துறையினர் 30 நிமிடங்களில் சுற்றி வளைத்து தொழிலதிபரை மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம் அய்யன் பெருமாள் பட்டியைச் சேர்ந்தவர் தொழிலதிபர் நித்தியானந்தம் (வயது 47). இவர் காற்றாலைகளுக்கு உதிரி பாகங்கள் விநியோகம் செய்யும் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று தமிழ்நாடு காவல்துறையின் கட்டுப்பாட்டு அறை எண்ணான 100ஐ தொடர்பு கொண்ட நித்தியானந்தத்தின் நண்பர் ஒருவர்,  நெல்லையைச் சேர்ந்த கும்பல் ஒன்று நித்தியானந்தத்தை கடத்தி வைத்திருப்பதாகவும், அவரிடம் பணம் கேட்டு மிரட்டி வருவதாகவும் பரபரப்பு புகார் ஒன்றை தெரிவித்துள்ளார். 

உடனே அலார்ட் ஆன காவலர்கள் இத்தகவலை உடனடியாக நெல்லை மாநகர காவல்துறைக்கு தெரிவித்தனர். மாநகர காவல் ஆணையர் மூர்த்தி உத்தரவின் பேரில் உதவி ஆணையர் ஆதர்ஷ் பசாரே, உதவி ஆய்வாளர் அருணாச்சலம் தலைமையிலான போலீசார் நித்தியானந்தத்தின் செல்போன் எண்ணை வைத்து அதிரடியாக அவரது இருப்பிடத்தை கண்டுபிடித்தனர். நெல்லை அருகே பொன்னாக்குடி பகுதியில் பெண் உட்பட ஐந்து பேர் சேர்ந்து நித்தியானந்தத்தை கடத்தி வைத்திருந்தது தெரிய வந்தது. 

அதிமுக வேட்பாளரின் நிலத்தில் ரத்த காயத்துடன் முதியவர் மர்ம மரணம்; போலீசார் அதிரடி விசாரணை

இதையடுத்து போலீசார் அக்கும்பலிடம் இருந்து நித்தியானந்தத்தை மீட்டு நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது நெல்லை பெருமாள் புரம் என் ஜிஓ காலனியைச் சேர்ந்த பானுமதி(வயது 40) என்ற பெண் முகநூல் மூலம் நித்தியானந்தத்திடம் பழகி வந்துள்ளார். பின்னர் ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருக்கலாம் வாங்க என நெல்லைக்கு வரும்படி அழைத்துள்ளார். 

பானுமதியின் பேச்சை நம்பி நெல்லைக்கு வந்த நித்தியானந்தம் பெருமாள்புரம் பகுதிதியில் உள்ள ஒரு விடுதியில் பானுமதியை தனியாக சந்தித்துள்ளார். தனி அறையில் இருவரும் இருந்த நிலையில் திடீரென நான்கு பேர் கொண்ட கும்பல் அந்த அறைக்குள் நுழைந்துள்ளனர். இதனால் நித்தியானந்தம் அதிர்ச்சி அடைந்துள்ளார். அதன் பிறகே பானுமதி தன்னிடம் ஆசை வார்த்தை கூறி தன்னை கடத்தியது நித்தியானந்தத்திற்கு தெரிய வந்துள்ளது. 

தொடர்ந்து பானுமதி மற்றும் அவரது கூட்டாளிகளான தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வெள்ளத்துரை, பார்த்தசாரதி, ரஞ்சித், சுடலை ஐந்து பேரும் சேர்ந்து கத்தி முனையில் நித்தியானந்தம் அணிந்திருந்த மூன்றரை சவரன் தங்க நகைகளை பறித்ததோடு ஏடிஎம் கார்டில் இருந்து ரூ.60 ஆயிரம், ஆன்லைன் பண பரிவர்த்தனை முறையில் ரூ.75 ஆயிரம் என ஒரு லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்துள்ளனர். தொடர்ந்து காசோலையில் கையெழுத்து வாங்கி 10 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்து தரும்படி வங்கி ஒன்றிற்கு நித்தியானந்தத்தை அக்கும்பல் அழைத்து சென்றுள்ளது. 

நான் ஒரு குடிமகன் என் வண்டியவே நிருத்துவியா? போதையில் காவலரை புரட்டி எடுத்த புதுமாப்பிள்ளை

பணம் தரவில்லை என்றால் தன்னை கற்பழித்து விட்டதாக போலீசாரிடம் புகார் அளித்து விடுவேன் என்று பானுமதி மிரட்டியதாகக் கூறப்படுகிறது. தொழிலதிபராக இருப்பதால் இந்த விஷயம் வெளியே தெரிந்தால் அவமானமாகிவிடும் என்ற பயத்தில் நித்தியானந்தம் அவர்கள் கேட்ட அனைத்திற்கும் ஒப்புக் கொண்டுள்ளார். பின்னர் வங்கிக்கு அழைத்துச் செல்லும் போது தான் நித்யானந்தம் நைசாக தனது நண்பரை தொடர்பு கொண்டு தனக்கு ஏற்பட்ட ஆபத்து குறித்து தெரிவித்துள்ளார். 

அதன் பிறகே நித்தியானந்தத்தின் நண்பர் தகவலை தெரிவித்த உடன் சம்பவத்தின் வீரியத்தை புரிந்து கொண்ட காவல் துறையினர் அதிரடியாக களத்தில் இறங்கி 30 நிமிடத்திற்குள் பானுமதி மற்றும் அக்கும்பலை சுற்றி வளைத்து நித்தியானந்தத்தை மீட்டுள்ளனர். தொடர்ந்து அக்கும்பலிடம் நடத்திய விசாரணையில், பானுமதி இது போன்று பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளம் மூலம் அரசு ஊழியர்கள், தொழிலதிபர்கள் என பல்வேறு நபர்களை ஏமாற்றி பல லட்சம் பணத்தை பறித்தது தெரியவந்துள்ளது. இதற்கிடையில் இந்த  விவகாரத்தில் அதிரடியாக செயல்பட்டு 30 நிமிடங்களுக்குள் குற்றவாளிகளை கைது செய்து தொழிலதிபரை மீட்ட போலீசாரை மாநகர காவல் ஆணையர் மூர்த்தி நேரில் அழைத்து பாராட்டினார்.

click me!