கள்ளக்குறிச்சி அதிமுக வேட்பாளரின் நிலத்தில் ரத்த காயத்துடன் முதியவர் மர்ம மரணம்; போலீசார் அதிரடி விசாரணை

By Velmurugan s  |  First Published May 2, 2024, 4:10 PM IST

கள்ளக்குறிச்சி அதிமுக வேட்பாளர் குமரகுருவின் நிலத்தில் முதியவர் ஒருவர் ரத்த காயத்துடன் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எடைக்கல் கிராமத்தில் கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக வேட்பாளரும், அதிமுக மாவட்ட செயலாளருமான குமரகுருவுக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. அந்த நிலத்தில் சுமார் 85 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் உயிரிழந்த நிலையில் கிடப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் எடைக்கல் காவல் துறையினர் அங்கு விரைந்து சென்று உயிரிழந்தவரின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். 

விசாரணையில், உயிரிழந்த நபர் எடைக்கல் கிராமத்தைச் சேர்ந்த வேலாயுதம் என்பது தெரியவந்தது. கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு வேலாயுதம் மனைவி சாரதாம்பாள் உயிரிழந்த நிலையில், நேற்று அவரது நினைவு தினத்தை வேலாயுதம் குடும்பத்தினர் அனுசரித்தனர். அப்போது வேலாயுதம் தனது மகன்கள் இருவரிடமும் தான் இறந்து விட்டால் தன்னையும் அம்மாவின் உடல் அடக்கம் செய்த இடத்தின் அருகிலேயே அடக்கம் செய்யுமாறு நேற்று மாலை கூறியதாக கூறப்படுகிறது. 

Latest Videos

undefined

கோவையில் அடுத்தடுத்து 3 கல்லூரி மாணவர்கள் தற்கொலை; அதிர்ச்சியில் பெற்றோர், போலீசார்

இந்த நிலையில் நேற்று இரவு முதல் திடீரென மாயமான வேலாயுதத்தை அவரது இரண்டு மகன்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. ஆனால், இன்று அதிமுக மாவட்ட செயலாளர் குமரகுரு நிலத்தில் ரத்தக்காயத்துடன் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர். இதுகுறித்து வேலாயுதத்தின் மகன் கந்தசாமி எடைக்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

அடிக்குற வெயிலுக்கு ஏசி இல்லாம தூங்க முடியல சார்; மது போதையில் ஏடிஎம் மையத்தில் குடியேறிய ஆசாமி

புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வேலாயுதத்தின் உடல் பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.  அதிமுக மாவட்ட செயலாளர் நிலத்தில் உயிரிழந்தவர் மனைவியின் துக்கம் தாங்காமல் உயிரிழந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

click me!