கள்ளக்குறிச்சியில் இருசக்கர வாகனத்தில் முந்தி செல்வதில் ஏற்பட்ட தகராறில் இரு கிராம இளைஞர்கள் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர். மேலும் தாக்குதலை தடுக்கச் சென்ற போலீசார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதால் பெரும் பரபரப்பு.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள மூலசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் உளுந்தூர்பேட்டையில் இருந்து மூலசமுத்திரம் கிராமத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர். அதேபோல் ஆர்.ஆர்.குப்பம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் இருசக்கர வாகனத்தில் உளுந்தூர்பேட்டையில் இருந்து ஆர்.ஆர்.குப்பம் கிராமத்தில் உள்ள வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர்.
undefined
இவர்கள் சென்ற இரண்டு இருசக்கர வாகனங்களும் உளுந்தூர்பேட்டையை அடுத்த மூலசமுத்திரம் தக்கா கிராமத்தில் சென்ற பொழுது இருசக்கர வாகனங்களை முந்தி செல்வதில் இருகிராம இளைஞர்கள் இடையே தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த இரு கிராம இளைஞர்களும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர். உளுந்தூர்பேட்டை சேலம் சாலையில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைக்கு செல்லும் சாலையில் எதிரே நடுரோட்டில் நடந்த இந்த தகராறு காரணமாக அந்தப் பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
இதனால் சாலையில் இருசக்கர வாகனம் மற்றும் ஆட்டோவில் சென்றவர்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகி சாலையிலேயே நின்றனர். இது பற்றி தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை போலீசார் அங்கு விரைந்து சென்று தகராறில் ஈடுபட்டவர்களை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்வதற்காக ஆட்டோவில் ஏற்றிய பொழுது தகராறில் ஈடுபட்ட இளைஞர்கள் போலீசாரையும் கடுமையாக தாக்கினர்.
இது தொடர்பான காட்சி தற்பொழுது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே போல் இரு சக்கர வாகனத்தில் முந்தி ஓட்டிச் செல்வதில் ஏற்பட்ட தகராறில் ஒலையனூர் மற்றும் குணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதோடு அந்த வழியே வந்த அரசு விரைவு பேருந்தை கல்வீசித் தாக்கி கண்ணாடியை உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இந்த சம்பவம் நடைபெற்று ஒரு வாரத்திற்குள் மீண்டும் அதே போல் ஒரு சம்பவம் அரங்கேறி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசாரை தாக்கி தகராறில் ஈடுபட்ட இளைஞர்கள் நான்கு பேரை பிடித்து உளுந்தூர்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.