விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 900 நாட்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பரந்தூர் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்க நடிகர் விஜய் இன்று பரந்தூர் செல்கிறார். இந்தநிலையில் அனுமதி பெறாத வாகனத்தில் வந்த அக்கட்சியின் பொருளாளர் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்..
அரசியல் களத்தில் விஜய்
தமிழக அரசியல் களத்தில் இறங்கியுள்ளார் நடிகர் விஜய், தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியவர் மிகப்பெரிய அளவில் மாநாடு நடத்தி அசத்தினார். இதனையடுத்து தவெக செயற்குழு கூட்டத்தை கூட்டியவர் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவந்தார். இதனையடுத்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவராண உதவி வழங்கிய விஜய், பல்வேறு சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கையையும் வெளியிட்டார்.
இதனையடுத்து அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக பல்வேறு அரசியல் தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் ஆளுநர் ரவியை சந்தித்து தவெக தலைவர் விஜய் புகார் அளித்தது மட்டுமில்லாமல் மழை வெள்ளத்திற்கு மத்திய அரசை நிதி ஒதுக்கும் படி கோரிக்கை வைத்தார்.
மக்களை சந்திக்கும் விஜய்
இந்த நிலையில் அடுத்தக்கட்டமாக பரந்தூர் மக்களை சந்தித்து ஆதரவளிக்க களத்தில் இறங்கியுள்ளார் விஜய். காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் விமான நிலையம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக பரந்தூர் மற்றும் சுற்றியுள்ள 13 கிராமங்களில் இருந்து விளைநிலங்கள், நீர்நிலைகள் உட்பட 5,133 ஏக்கர் நிலம் கையகப்படுத்த திட்டமிடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 900 நாட்களுக்ளுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனையடுத்து பரந்தூர் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நடிகர் விஜய் இன்று பரந்தூர் செல்கிறார். இதற்காக போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகள் நியமிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பரந்தூரில் த.வெ.க தலைவர் விஜய் இருக்க கூடாது. நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரை விஜய் பரந்தூர் மக்களை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் பரந்தூர் உள்ளிட்ட கிராம மக்களை அழைத்து வரப்பட்டுள்ளனர். இதற்காக பல்வேறு பாதுகாப்புகளை போலீசார் மேற்கொண்டுள்ளனர். அந்த வகையில் பரந்தூர் விமான நிலையம் எதிர்ப்பு போராட்ட குழுவினரை விஜய் சந்திப்பதற்கு அந்த கட்சியின் பொருளாளர் வெங்கட்ராமன் காவல்துறையிடம் மனு அளித்து அனுமதி பெற்று இருந்தார். இந்தநிலையில் காவல்துறையினர் கூட்டம் நடைபெறும் தனியார் திருமண மண்டபத்திற்கு வந்திருந்த வெங்கட்ராமனை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
போலீசார் அனுமதி மறுப்பு
அனுமதிக்கப்பட்ட வாகனங்கள் மட்டுமே உள்ளே அனுப்பப்படும். ஏற்கனவே காவல்துறையிடம் எந்தெந்த கார்கள் அனுப்ப வேண்டுமென்ற பட்டியல் உள்ளது. உங்கள் கார் அந்த பட்டியலில் இல்லை என காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இங்கு நிறுத்தாமல் காரை ஓரம் கட்டுங்கள் என காவல்துறையினர் காராக பேசியதால் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.