ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் முதல் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது. மாணவர்களின் அணிவகுப்பு ஒத்திகையும் நிகழ்த்தப்பட்டது.
குடியரசு தின விழா- ஒத்திகை
குடியரசு தின விழா கொண்டாட்டத்திற்கு நாடே தயாராகி வருகிறது. அந்த வகையில் ஜனவரி 26ஆம் தேதி டெல்லியில் குடியரசு தலைவர் கொடியேற்றி வைக்கவுள்ளார். இதே போல ஒவ்வொரு மாநிலத்திலும் அந்த, அந்த மாநில ஆளுநர்கள் தேசியகொடியை ஏற்றி வைக்கவுள்ளனர். அந்த வகையில் இந்தாண்டு குடியரசு தினவிழாவையொட்டி கலை நிகழ்ச்சிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது.
இந்த நிலையில் தமிழக ஆளுநருக்கும் தமிழக அரசுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் ஆளுநர் ரவி தனது உரையை வாசிக்காமல் புறக்கணித்து சென்றார். மேலும் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரம் ஆளுநருக்கு வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளது. இது போன்று பல்வேறு சம்பவங்களில் முரன்பாடு ஏற்பட்டுள்ளது.
கொடியேற்றும் ஆளுநர் ரவி
இந்த பரபரப்பான சூழ்நிலையில் ஜனவரி 26ஆம் தேதி ஆளுநர் ரவி சென்னை மெரினா கடற்கரைசாலையில் தேசிய கோடியை ஏற்றி வைக்கவுள்ளார். இதனையடுத்து சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின விழாவின் முதல் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 76 ஆவது குடியரசு தினம் வருகின்ற 26 ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. குடியரசு தினத்தையொட்டி தமிழகத்தின் கலச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக அணிவகுப்புகள் நடைபெறும்.
சென்னையில் மாணவர்கள், முப்படைகள் ஒத்திகை
76 ஆவது குடியரசு தினத்தையொட்டி அணிவகுப்பிற்கான முதல் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று 22, 24 ஆகிய தேதிகளில் ஒத்திகை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதால் மெரினா கடற்கரை பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குடியரசு தினம் அன்றும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற குடியரசு தின ஒத்திகை நிகழ்வில் ஆளுநர் மற்றும் முதலமைச்சர் வருவது போல் ஒத்திகைகள் நடைபெற்று வருகிறது. மேலும் முப்படை வீரர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணாக்கர்களின் அணிவகுப்பு மற்றும் கலை நிகழ்ச்சிக்கான ஒத்திகையும் நடைபெற்றது.