பருவம் தப்பிய மழையால் பயிர்கள் சேதம்; நிவாரணம் வழங்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

By SG Balan  |  First Published Jan 19, 2025, 10:45 PM IST

பனிப்பொழிவு, மழையால் டெல்டா மாவட்ட நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அறுவடைக்குத் தயார் நிலையில் இருந்த நெல்மணிகள் ஈரப்பதத்தால் சாய்ந்துள்ளன. இதனால், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்


பனிப்பொழிவு மற்றும் பருவம் தவறிய மழை காரணமாக அறுவடைக்குத் தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டு இருப்பதால், தமிழக அரசு விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி இருக்கிறார்.

இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

Tap to resize

Latest Videos

"2025-ம் ஆண்டு துவக்கத்திலிருந்தே தமிழகம் முழுவதும் கடும் பனி பெய்து வருகிறது. இதனால், டெல்டா மாவட்டங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா நெற்பயிர்களில் உள்ள நெய் மணிகள் ஈரப்பதம் அதிகரித்து கனம் தாங்காமல் சாய்ந்து விட்டன. இந்நிலையில், நேற்று முதல் 3-4 நாட்கள் வரை மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதைத் தொடர்ந்து, நேற்று இரவு முதல் தமிழகம் முழுவதும் பாயலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம். மயிலாடுதுறை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் மழைப் பொழிவின் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் பெரும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளன.

ஏற்கெனவே, பனிப்பொழிவின் காரணமாக நெல்மணிகள் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று முதல் பெய்து வரும் மழையினாலும் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டு, அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா நெற்பயிர்கள் பெரும் பாதிப்பிற்குள்ளாகி வருகிறது. மேலும், அறுவடை செய்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்ட நெல் மூட்டைகள் உடனுக்குடன் கொள்முதல் செய்யப்படாததால், வெட்ட வெளியில் இருக்கும் நெல் மூட்டைகள் பனிப்பொழிவு மற்றும் மழையினால் நனைந்து அதிக ஈரப்பதம் உள்ளதாக இருக்கின்றன.

எனவே, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் எந்தவித நிபந்தனையும் இல்லாமல் விவசாயிகள் கொண்டு வரும் அனைத்து நெல் மூட்டைகளையும் கொள்முதல் செய்ய வலியுறுத்துகிறேன். சம்பா பயிரிட்ட விவசாயிகள் பனிப்பொழிவு மற்றும் பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்டு பெரும் நஷ்டத்தை சந்தித்து வரும் சூழ்நிலையில் திமுகவின் ஸ்டாலின் மாடல் அரசு விவசாயிகளின் சிரமங்களைப் போக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

உடனடியாக வருவாய் மற்றும் வேளாண் துறை அதிகாரிகளை நேரடியாக அனுப்பி, பாதிக்கப்பட்ட வேளாண் நிலங்களை கணக்கீடு செய்து, பாதிக்கப்பட்ட விவசாமிகளுக்கு அரசு நிவாரணம் வழங்கவும், பயிர்க் காப்பீடு மூலம் உரிய இழப்பீடு வாங்கித்தரவும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். உடனடியாக டெல்டா மாவட்டங்கள் முழுவதும் நெல்மணிகளை காய வைக்கும் 'டிரையர்' வண்டிகளை அனுப்பி நெல்மணிகளின் ஈரப்பதத்தை குறைக்க வழிவகை செய்ய வேண்டும்.

தற்போது, நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 17 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்யும் நிலையில், பனி மற்றும் மழையினால் ஈரப்பதம் அதிகமாகியுள்ளதை கணக்கில் கொண்டு 22 சதவீதம் வரை ஈரப்பதம் கொண்ட நெல்லையும் கொள்முதல் செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே, உடனடியாக பனிப்பொழிவு மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட விவசாயிகளுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்க திமுகவின் ஸ்டாலின் மாடல் அரசை வலியுறுத்துகிறேன்."

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

click me!