கடந்தது கஜா... 130 கி.மீ. வேகத்தில் அசுரக் காற்று வீச்சு... தப்பித்தது தமிழகம்...!

By thenmozhi gFirst Published Nov 16, 2018, 1:18 PM IST
Highlights

கஜா புயலால் தமிழகமே கலங்கியிருந்த நிலையில் கடலூருக்கும் வேதாரண்யத்துக்கும் இடையே நள்ளிரவு 12 மணியளவில் புயலின் முன்பகுதி கரையைக் கடக்கத் தொடங்கியது. தொடக்கத்திலேயே காற்று சற்று பலமாக வீசிய நிலையில் கஜா புயலின் கண் பகுதி 1 மணியளவில் தரையைக் கடக்கத் தொடங்கியது. 

கஜா புயலால் தமிழகமே கலங்கியிருந்த நிலையில் கடலூருக்கும் வேதாரண்யத்துக்கும் இடையே நள்ளிரவு 12 மணியளவில் புயலின் முன்பகுதி கரையைக் கடக்கத் தொடங்கியது. தொடக்கத்திலேயே காற்று சற்று பலமாக வீசிய நிலையில் கஜா புயலின் கண் பகுதி 1 மணியளவில் தரையைக் கடக்கத் தொடங்கியது. அப்போது அதிகபட்சமாக 130 கி.மீ. வேகத்தில் அசுரக் காற்று வீசியது. கண்பகுதி கடந்தபோது காற்றின் வேகம் சிறிது மட்டுப்பட்டது. ஆனால் மழை தீவிரமாகப் பெய்யத் தொடங்கியது. இரவு 2.20 மணியளவில் கண்பகுதி முழுவதுமாகக் கடந்தது. இதைத் தொடர்ந்து கஜா புயலின் மூன்றாவது பகுதியான வால் பகுதி கடப்பதற்கு சுமார் ஒன்றரை மணிநேரம் பிடித்தது.

நாகை, கடலூர், திருவாரூர் மாவட்டத்தில் புயல் கரையைக் கடக்கும்போது சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. புதுச்சேரியில் 50 கி.மீ. வேகத்தில் கனமழையுடன் காற்று வீசியது. காரைக்காலில் ஓரிடத்தில் மின் டிரான்ஸ்பார்மர் வெடித்து சிதறியதைத் தவிர பெரிய பாதிப்புகள் எதுவும் இல்லை. சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கஜா புயலால் பெரிய பாதிப்புகள் இல்லை.

முன்னதாக கஜா புயலினால் ஏற்படக்கூடிய அசம்பாவிதங்களைத் தவிர்க்க தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது. புயல் கடக்கும் இரவுவேளையில் மக்கள் வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே பத்திரமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.
நாகை, திருவாரூர், ராமநாதபுரம், சென்னை உள்பட 6 மாவட்டங்களில் தாழ்வான பகுதியைச் சேர்ந்த 81 ஆயிரத்து 698 பேர் 461 முகாம்களில்தங்க வைக்கப்பட்டனர்.

ராமேஸ்வரம், பாம்பன், கடலூரைச் சேர்ந்த பெரும்பாலான மீனவ மக்களும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். பாதுகாப்பு காரணமாக பாம்பனில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு நேற்றிரவு 9 மணி முதலே தடை விதிக்கப்பட்டது. இன்று காலைவரை பாம்பன்-ராமேஸ்வரம் கடல் மேம்பாலத்தில் எந்த வாகனமும் செல்ல போலீஸார் அனுமதிக்கவில்லை.

அந்தப் பகுதியில் இருந்த மீன்பிடி படகுகள் பாதுகாப்பான பகுதிகளுக்குக் கொண்டு செல்லப்பட்டு நிலைநிறுத்தப்பட்டன. ஆங்காங்கே மருத்துவ நிவாரண முகாம்களும் தாற்காலிகமாக அமைக்கப்பட்டிரு்நதன.
தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் விடிய விடிய புயல் பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணித்து அதிகாரிகளுக்குத் தேவையான உத்தரவுகளை வழங்கி வந்தார்.

நாகை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் காற்றின் வேகம் தாங்காமல் ஏராளமான மரங்கள் சாய்ந்தன. முன்னதாக, கடலோரப் பகுதிகளில் இரு்நத உயரமான மரங்களின் கிளைகள் ராட்சத பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு வெட்டி சாய்க்கப்பட்டன. இதனால் சேதம் பெருமளவில் தவிர்க்கப்பட்டது. இருப்பினும் பல இடங்களில் மரங்கள் சாய்ந்ததில் மின்கம்பங்கள் சரிந்து விழுந்தன.புயல் கடக்கும் பகுதிகளில் அதிகாரிகள் முன்னரே மின் விநியோகத்தை நிறுத்தி விட்டனர்.

கஜா புயலின் மையப் பகுதியை இரவு 2.30 மணியளவில் கடந்த பிறகு காற்று எதிர்திசையில் பலமாக வீசத் தொடங்ியது. தொடர்ந்து கனமழை பெய்து வந்தது. இந்நிலையில் கஜா புயல் அதிகாலை ஐந்தரை மணியளவில் முழுமையாகக் கடந்தது. 

கஜா புயலால், தமிழகத்தில் இதுவரை 11 பேர் இறந்துள்ளதாக அதிகார பூர்வ தகவல் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!