ராம்குமார் மின்சாரம் பாய்ந்து உயிரிழக்கவில்லை... மரணத்தில் நீடிக்கும் மர்மங்கள்!!

By manimegalai aFirst Published Oct 28, 2021, 2:12 PM IST
Highlights

ராம்குமார் மரணத்தில் நிலவும் சந்தேகம் தொடர்பாக அவரது உடலை உடற்கூராய்வு செய்த மருத்துவரிடம் மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூன்.24 ஆம் தேதி சுவாதி என்ற பெண் வெட்டி கொலைசெய்யப்பட்டார். ரயில் நிலையத்தில் பட்டபகலில் மக்கள் முன்னிலையில் மென்பொறியாளர் சுவாதி வெட்டிகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை அடுத்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது நெல்லை மாவட்டம், மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார் என்ற 22 வயது இளைஞரை கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கைது செய்தனர். பின்னர் அவரை சென்னைக்கு அழைத்து வந்த காவல்துறையினர் அவரை மருத்துமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து பின்னர் அவரை புழல் சிறையில் அடைத்தனர். இதனிடையே செங்கல்பட்டு, பரனூரில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்ப்பதற்கு புறநகர் ரயிலில் சுவாதி செல்லும்போதெல்லாம், ராம்குமார் பின்தொடர்ந்து சென்று காதலிப்பதாக கூறி தொல்லை கொடுத்ததாகவும் அதன் தொடர்ச்சியாகவே கொலை நடந்ததாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பின்னர், அடுத்து வந்த சில வாரங்களில் சிறையில் மின்சார வயரை கடித்து ராம்குமார் தற்கொலை செய்து கொண்டதாகவும் சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதால் நீதி விசாரணை வேண்டும் என்ற கோரிக்கையும் அப்போதைய எதிர்கட்சிகள் முன்வைத்தன. இந்நிலையில், ராம்குமார் மரணத்தை தாமாகவே முன்வந்து மாநில மனித உரிமைகள் ஆணையம் விசாரிக்க தொடங்கியது. ராம்குமாரின் தந்தை அளித்த வழக்கின் அடிப்படையில் மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. உடற்கூராய்வு செய்த மருத்துவர் ஒருவர், ராம்குமாரின் உடராம்குமாரின் மூளை திசு, இதய திசுக்கள் நல்ல நிலையில் இருந்தன. நுரையீரல், கல்லீரல், மண்ணீரல், மேல் உதடு, கீழ் உதடு, சிறுநீரகம் போன்றவையும் நல்ல நிலையில் இருந்ததாக சான்று கொடுத்துள்ளோம் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் மனித உரிமைகள் ஆணையத்தில் இந்த வழக்கு இன்று விசாரணை வந்தது. அப்போது ராம்குமாரின் உடலை உடற்கூராய்வு செய்யும் போது பொறுப்பாளராக இருந்த தலைமை மருத்துவர் செல்வகுமார் ஆஜரானார். அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முன்னதாகவே உடற்கூராய்வு செய்த மருத்துவர்கள் ராம்குமார் உடலில் மின்சாரம் பாய்ந்து இறந்ததற்கான ஆதாரங்கள் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்த நிலையில் தற்போது ராம்குமாரின் மரணத்தில் மேலும் குழப்பங்களும் சந்தேகங்களும் நீடிக்கின்றன. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் சிறையில் ராம்குமார் கொல்லப்பட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டுகினர். இந்த நிலையில் வழக்கில் மறு விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையோடு, இந்த வழக்கில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பினர் களமிறங்கியுள்ளனர். அதுமட்டுமின்றி இதுதொடர்பாக, 19 ஆம் தேதியன்று ராம்குமாரின் பெற்றோர், உறவினர்களை சந்தித்து விரிவாக விவாதித்துள்ளனர். இதனிடையே சிறையில் மின்சாரம் தாக்கி ராம்குமார் இறக்கவில்லை என மருத்துவர்கள் கூறியதாக வழக்கறிஞர் ராம்ராஜ் ஏற்கனவே தகவல் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

click me!