நேர்மையான அதிகாரிகளை ஊக்குவிக்க கோரி மக்கள் சேவை இயக்க நிர்வாகிகள் போராட்டம்...

First Published Jul 7, 2018, 11:59 AM IST
Highlights
should encourage honest officers People service executives struggle


அரியலூர்

நேர்மையாக பணியாற்றும் அதிகாரிகளை அவமானப்படுத்தாமல் அவர்களை ஊக்குவிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் சேவை இயக்கத்தினர் போராட்டம் நடத்தினர்.

மக்கள் சேவை இயக்கத்தின் நிர்வாகிகள் ஐந்து பேர் அரியலூர் ஆட்சியரகம் முன்பு கண், காது, மற்றும் வாயை பொத்தி கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தில், "விருதுநகர் மக்களின் நன்மதிப்பைப் பெற்ற டிஆர்ஓ ஆனந்தகுமாரை அநாகரிகமாக நடத்தும் அம்மாவட்ட நிர்வாகத்தைக் கண்டிப்பது, அவருக்கு வழங்கப்பட வேண்டிய சலுகைகளை உடனடியாக வழங்க வேண்டும். 

திருமானூர் அருகேயுள்ள வெங்கனூர் ஏரி,கரைவெட்டி பறவைகள் சரணாலயம் ஏரி மற்றும் அரியலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து ஏரிகளையும் தூர்வார வேண்டும். 

சிதம்பரத்தில் டிராக்டர் ஜப்தியால் உயிரிழந்த விவசாயி தமிழரசனுக்கு ரூ. 50 இலட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். உயிரிழப்புக்கு காரணமான வங்கி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நேர்மையாக பணியாற்றும் அதிகாரிகளை அவமானப்படுத்தாமல் அவர்களை ஊக்குவிக்க வேண்டும்" உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இந்தப் போராட்டத்தில் மக்கள் சேவை இயக்க தலைவர் தங்க. சண்முகசுந்தரம், மாவட்ட துணைச் செயலர் ஐயப்பன், திருச்சி மாவட்ட துணைச் செயலர் தன்ராஜ், வேப்பூர் ஒன்றியச் செயலர் மாற்றுத்திறனாளி மதியழகன், திருமானூர் ஒன்றிய பொறுப்பாளர் சேட் ஆகியோர் பங்கேற்றனர்.

இவர்கள் போராட்டம் முடிந்ததும் மாவட்ட ஆட்சியர் மு.விஜயலட்சுமியை சந்தித்து மேற்கண்ட கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.


 

click me!