மறைந்த முதுபெரும் அரசியல் தலைவர் ஆர்.எம்.வீரப்பன் தமிழ் சினிமா, அரசியல் இரண்டிலுமே தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கினார்.
தமிழ்நாட்டின் முதுபெரும் திராவிட அரசியல் தலைவரும், அதிமுக முன்னாள் அமைச்சரும், எம்.ஜி.ஆரின் நிழலாக இருந்தவரும், எம்.ஜி.ஆர் கழக தலைவருமான ஆர்.எம். வீரப்பன் இன்று உடல்நலக்குறைவால் காலமானார். வயது மூப்பு காரணத்தால் ஏற்பட்ட உடல்நல குறைவு ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் ஆர்.எம்.வீ. அவரின் மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
புதுக்கோட்டையில் சாதாரண குடும்பத்தில் 7 குழந்தைகளில் கடைசியாக பிறந்த ஆர்.எம். வீரப்பன் .சிறுவயதிலேயே நாடகம் மற்றும் பாடல் மீது ஈர்ப்பு கொண்டிருந்தார்.. ஆனால் அவரின் தந்தையின் மரணத்தால் குடும்பத்தின் நிதி நிலைமையால் அவரின் கல்வி 9-ம் வகுப்பிலேயே முடிந்தது. கல்வியை 9 ஆம் வகுப்பில் முடித்தது. அவர் நாச்சியார்புரத்தில் உள்ள அவரது மைத்துனரின் கடையில் உதவிக்கு வேலைக்கு சேர்ந்தார்..
undefined
சுயமரியாதை இயக்கம் முதல் நாடகமேடை வரை... படிப்படியாக வளர்ந்த ஆர்.எம்.வீரப்பனின் குடும்பப் பின்னணி!
ஆனால் ஒரு நாள் ஆர்.எம்.வி எடுத்த முடிவு அவரின் வாழ்க்கையையே மாற்றியது. ஆம். நாச்சியார்புரத்திற்கு கடைக்கு வேலைக்கு செல்வதற்கு பதில் பிரபல மேடைக் கலைஞர்களான டி.கே.சண்முகம் சகோதரர்கள் முகாமிட்டிருந்த காரைக்குடிக்கு அவர் பயணம் செய்தார் ஆர்.எம்.வீ. தனது பாடும் திறமையால் அவரை நாடக குழுவில் சேர்த்துக் கொண்டனர்.
திராவிட இயக்கத்தின் மீது பேரார்வம் கொண்ட ஆர்.எம். வீரப்பனுக்கு பெரியார், அண்ணாவிடம் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அண்ணா மூலம் எம்.ஜி.ஆரின் அறிமுகம் ஆர்.எம்.வீக்கு கிடைத்தது.
1953 ஆம் ஆண்டு திமுகவில் இணைந்து, எம்ஜிஆர் நாடக மன்றம் என்ற நாடகக் குழுவை வைத்திருந்த எம்ஜிஆரை, ஆர்.எம்.வி.யின் செயல்களும், பணிகளும் கவர்ந்தது. அந்த நேரத்தில் தான் எம்ஜிஆர் மேனேஜரைத் தேடிக்கொண்டிருந்தார். ஆர்.எம்.வி. அதற்கு பொருத்தமானவர் என்று கருதிய எம்.ஜி.ஆர், அவரை தனது நாடக குழுவின் மேனஜராக பணியமர்த்தினார்.
மேனேஜராக பணியாற்றிய ஆர்எம்வியின் நேர்மை மற்றும் அர்ப்பணிப்பை பார்த்த எம்.ஜி.ஆர், அவரை 1958-ம் ஆண்டு எம்ஜிஆர் பிக்சர்ஸின் நிர்வாக இயக்குநராக மாற்றினார். எம்.ஜி.ஆரின் தீவிர விசுவாசியாக இருந்த ஆர்.எம்.வீ. சொந்தமாக தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். எம்.ஜி.ஆரின் தாயார் பெயரில் சத்யா மூவிஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய அவர், முதல் படமாக எம்.ஜி.ஆரை வைத்தே தெய்வத்தாய் என்ற படத்தை தயாரித்தார்..
யார் இந்த ஆர்.எம்.வீரப்பன்? எம்.ஜி.ஆரின் வலதுகரம்; ரஜினிக்காக ஜெயலலிதாவை பகைத்துக் கொண்டவர்!
இப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்ததை தொடர்ந்து, நான் ஆணையிட்டால், காவல்காரன், கண்னன் என் காதலன், ரிக்ஷாகாரன், இதயக்கனி என எம்.ஜி.ஆரை வைத்து 6 படங்கள் தயாரித்து மாபெரும் வெற்றி பெற்றார். அதிமுக என்ற கட்சி உருவாவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன். 1977 முதல் 1986 வரை சட்ட மேலவை உறுப்பினராக இருந்தார். 1986-ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் நெல்லை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
1984 ஆம் ஆண்டில் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் - சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு பின்னர் அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது எம்.ஜி.ஆரால் சரியாக பேச முடியவில்லை. எனவே எம்.ஜி.ஆர் உயிருடன் இல்லை என்ற எதிர்க்கட்சிகள் பிரச்சாரம் செய்தனர்.
அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் தனது இரண்டு விரல்களை காட்டி சிரிக்கும் எம்.ஜி.ஆரின் புகைப்படத்தை ஆர்.எம்.வி முதலில் வெளியிட்டார். எம்.ஜி.ஆர் சாப்பிடுவது, செய்தித்தாள்களை வாசிப்பது போன்ற புகைப்படங்களையும் அவர் வெளியிட்டிருந்தார்.
1987-ம் ஆண்டு எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பிறகு ஜா.அணி, ஜெ. அணி என அதிமுக இரண்டாக பிரிந்தது. அப்போது ஜானகி அணியில் இருந்தார் ஆர்.எம்.வீ. எனினும் ஜானகி அணியால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் போனதால் ஆட்சி கவிழ்ந்தது. இதை தொடர்ந்து நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் ஜெயலலிதாவுக்கு அதிக ஆதரவு இருக்கவே, ஜெயலலிதாவுடன் சமாதானம் செய்து கொண்டார் ஆர்.எம்.வீ. அப்போது அவரை இணை பொதுச்செயலாளராக்கி ஆர்.எம்.வீ. அந்த பதவியில் வகித்த முதல் மற்றும் கடைசி தலைவர் ஆர்.எம்.வீ தான்.
ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஒன்றுபட்ட பின்னர் 1991-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தல் காங்கேயம் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று அமைச்சரானார். ஆர்.எம். வீரப்பன் பல படங்களை தயாரித்தாலும், ரஜினியை வைத்து அவர் தயாரித்த பாட்ஷா படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தின் வெற்றி விழாவில் பேசிய ரஜினி, மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தால் ஆண்டவனால் கூட தமிழ்நாட்டை காப்பாற்ற முடியாது என்று கூற அது தமிழ்நாட்டு அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த விழாவில் ஆர்.எம்.வீரப்பனும் இருந்ததால் அவரின் அமைச்சர் பதவியை பறித்தது மட்டுமின்றி அவரை அதிமுகவில் இருந்தே நீக்கினார் ஜெயலலிதா. அதன்பின்னர் தான் எம்.ஜி.ஆர் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கினார் ஆர்.எம்.வீரப்பன்.
ஆர்.எம்.வீ மற்றும் எம்.ஜி.ஆர் இருவருடனும் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த கவிஞர் வாலி, எம்.ஜி.ஆருக்குப் பின் ஆர்.எம்.வி தான் அதிமுகவின் தலைவராக வந்திருக்க வேண்டும் என்று ஒருமுறை கூறியிருந்தார். ஆனால் அது ஏன் நடக்கவில்லை என்பது இந்த உலகில் விடை தெரியாத பல கேள்விகளில் ஒன்றாக இருக்கும் என்றும் வாலி கூறியிருந்தார். அந்தளவுக்கு எம்.ஜி.ஆரின் விசுவாசி, வலதுக்கரம், இன்னும் சொல்லப்போனால் எம்.ஜி.ஆரின் நிழலாகவே வாழ்ந்தவர் தான் இந்த ஆர்.எம்.வீரப்பன்.